விகல்ப் சங்கத்துக்காக எழுதப்பட்டது (Written specially for Vikalp Sangam)
மொழிபெயர்ப்பு : த.கண்ணன்
(Sustaining a river through young minds)
அறிமுகம்
கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் இயற்கையெழில் சூழ்ந்த அகல்யா மரபுமுறை கிராமம் குழந்தைகளுக்கான கோடை முகாம் நடத்துவதற்கேற்ற சரியான சூழலை அளிக்கிறது. கல்வி சார்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஓர் இளைஞர் குழு பாரதபுழா என்று பரவலாக அழைக்கப்படும் நிலா ஆற்றினைப் பாதுகாப்பதில் இளைய தலைமுறையினரை எப்படித் தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வருகின்றனர் என்பதைக் காண நான் இங்கு வந்திருந்தேன். கேரளாவின் இரண்டாவது பெரிய ஆறான நிலாவாறு மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. தென் மலபாரின் செழிப்பான பண்பாட்டுக்கு இந்த ஆறு வழிவகுத்தது. இப்பண்பாடு நாட்டுப்புறப் பாடல்கள், ஆடல்கள், கலைகள், கைவினைகள், வாழ்வாதாரங்கள், உணவு என்று பலவற்றிலும் தோய்ந்துள்ளது. எனவேதான், திருச்சுரின் அரங்கொட்டுக்கரையிலிருந்து இயங்குகிற வயலி என்ற அரசுசாரா நிறுவனம் (www.vayali.org and www.facebook.com/vayaligroup), ஆல்ட்டர்சுகூல் (AlterSchool) (https://alterschool.wordpress.com) என்ற அமைப்பின் மூலமாக கலை, பண்பாடு, சூழலியல் கல்வி ஆகியவற்றை இணைக்கும் பாடத்திட்டத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க முனைகின்றனர். வாசகர்கள் இதை ஏதோ வழக்கமான சாரமற்ற கோடை முகாம் செயல்பாடு என்று புறந்தள்ளிவிடவேண்டாம். வயலியின் முன்னெடுப்புகள் குறித்துப் பலரும் எழுதுவதே, அவை எப்போதோ எடுக்கப்படும் ஒற்றை முயற்சியாக தங்களது வளம்பேணல் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் என்பதால்தான். ஆற்றோரம் அமைந்திருந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட( NSS) [1] முகாம்கள் வாயிலாக கல்வித்துறையில் அவர்கள் பணியாற்றத் தொடங்கினர். விரைவிலேயே ஆற்றைப் பேணுவதில் இளைஞர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்துவதற்கு அது சரியான வழியன்று என்று உணர்ந்தனர்.
அகல்யா மரபுமுறை கிராமம், பாலக்காடு
வரலாறு
வினோத் நம்பியாரும் அவரது நண்பர்களும் மக்களிசைப் பாடல்களைப் பரப்புவதற்காக ஒரு குழுவை 2004 தொடங்கியபோது வயிலி பிறந்தது. ஆல்ட்டர்சுகூல் நிறுவனரான சரத் வயலியில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். இராக்கேஷ் 2018ல் சேர்ந்தார். பிராவாகம் நடத்திய சமூகத் தொழில்முனைவோருக்கான தலைமைப் பட்டறையொன்றில் இருவரும் சந்தித்தனர். பனங் குறுத்தோலைகளைக் கொண்டு கைவினைகள் செய்யும் பயிற்சி வகுப்புகளை ஒரு இளைஞர்குழு நடத்திவந்ததுதான் ஆல்ட்டர்சுகூலுக்கு முன்னோடியாக இருந்தது. இது மெதுவாகச் சிறாருக்கான மக்களிசைப் பாடல்கள், கைவினைகள் என்று வளர்ந்தது. 2008ல் ஒரு திடமாக இளைஞர் அணி திரண்டது.
30-40 ஆண்டுகளுக்கு முன், பாரதப்புழா சம்ரக்சனா சமிதி என்ற பெயரில் பாரதப்புழா ஆற்றங்கரைகளில் ஆறுகளைக் காக்கும் முயற்சிகள் கேரளாவில் முதன்முறையாகத் தொடங்கின. 2016ம் ஆண்டு முதல் நடந்த இறுதி நான்கு மாநாடுகளில் வயலி அணியினர் கலந்துகொண்டபோது உள்ளூர்ச் சமூகத்தினரும் இளைஞர்களும் மிகக் குறைந்த அளவிலேயே பங்கெடுத்தனர் என்பதை உணர்ந்தனர். நிலா ஆற்றினைப் பாதுகாப்பதற்கான நீடித்த முயற்சிக்கு, இந்த இரு தரப்பினரின் முழுமனதான பங்கேற்பும் இன்றியமையாதது என்று அவர்கள் நம்பினர். டிசெம்பர் 2017ம் ஆண்டு இதை நோக்கிய முதலடி எடுக்கப்பட்டது. நிலா ஆற்றங்கரையோரம் இருந்த பள்ளிகளில் நடந்த நாட்டுநலப் பணித் திட்ட முகாம்களில் ஒரு கணக்கெடுப்பு எடுத்தனர். ஆறு பாழாகிக் கொண்டிருப்பதைப் பற்றிய அறிதல் இளைஞர்களுக்கு இருந்தபோதும் அதுகுறித்து ஏதேனும் செய்வதற்கான வெளியோ வாய்ப்புகளோ வழிகாட்டுதலோ இல்லை என்பதை இக்கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. நாட்டுநலப்பணித் திட்டங்கள் எவ்வித நோக்கமும் இன்றி நடத்தப்பட்டதையும் உணர்ந்தனர். வயலி அமைப்பினர் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்களுக்கான நோக்கமாக ஆற்றினைப் பாதுகாப்பதைக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஆலோசனை வழங்கினர். ஆற்றோடு பிணைக்கப்பட்ட செயல்பாடுகளை உருவாக்கும் கோரிக்கையை பள்ளிகளின் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எழுப்பினர். ஆற்றுப் பாதுகாப்புக் கல்வித்திட்டம் இவ்வாறுதான் உருவெடுத்தது. பிரவாகம் நடத்திய ஜக்ரிக் ஆட்டத்தில் பங்கெடுத்து, சரத்தும் இராக்கேசும் தில்லியில் பயற்சி பெற்ற பிறகு, இந்த எண்ணம் மேலும் திடமானது.
2017ல் ஆல்ட்டர்சுகூல் இதிலிருந்து மெதுவாகத் தோன்றியது. கல்வித்துறையில் ஈடுபட்டு, குழந்தைகளும் இளைஞர்களும் படைப்பாற்றலுடனும் கற்பனைவளத்துடனும் புத்தம்புது வழிகளில் சிந்திக்க ஊக்கவிக்கப்பட்டனர். 9-18 வயதினர் இவர்களது இலக்குக்குழுவாக உள்ளனர். குழந்தகளின் ஆர்வங்களில் ஈடுபட அவர்களை ஆதரிப்பதன் மூலமும் சமூகப் பயில்தல் வெளிகளை வளர்ப்பதன் மூலமும் இதை அடையமுடியும் என்று நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக, சமூகப் பன்மயப் பதிவேடுகளை உருவாக்குதல், ஆறுகளுடம் தொடர்புள்ள நாட்டாரியல் கதைகளை ஆவணப்படுத்திப் பரவலாக்குதல், இயற்கைக் குழாம்களை அமைத்தல், வேளாண் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றைக் கூறலாம். புழக்கூட்டங்கள் – ஆற்றைப் பற்றிய அக்கறைகொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் குழுவை உருவாக்குவதே இதன் நோக்கம். பள்ளி, கல்லூரிகளின் நாட்டுநலப்பணித் திட்டத்துக்கு வெளியே, கிராம இளைஞர்கள் ஆற்றுப்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்பொருட்டு ‘புழயாளிகள்’ என்ற கூட்டமைப்புவெளியை அமைக்க வயலி திட்டமிடுகிறது. இந்த இரு கூட்டமைப்புகளுமே ஆற்றங்கரையோரம் வெவ்வேறு இடங்களிலுள்ள வெவ்வேறு அமைப்புகளில் பணியாற்றும் இளைஞர்கள் ஒருங்குகூடி ஆற்றைக் காக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்க ஒரு வெளியை அமைப்பவை. இந்தக் கூட்டமைப்பு பல்வேறு மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் இது வயலியினுடையது மட்டுமன்று என்றும் வினோத் நம்பியார் வலியுறுத்துகிறார். ஆற்றுப்படையினராகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் உள்ளூர் இளைஞர்களைத் தொடர்ந்து உருவாக்கித்தரும் குழுமத்தை அமைப்பதன் மூலம், பாரதப்புழாவைப் பாதுகாக்க உதவும் முன்களப் படையினரை உருவாக்கித் தக்கவைத்து, ஆறு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வைக்க வயலி கருதுகிறது.
நோக்கங்கள்
ஆற்றுப் பாதுகாப்புக் கல்வித் திட்டத்தில் 1) மாணவர்களோடு ஆறு சார்ந்த மூன்று கூறுகளை – சமூகப் பொருளாதார, பண்பாட்டு, சுற்றுச்சூழல் கூறுகளைச் சுற்றி செயல்படுதல் – 2) பின்தொடர்வு நடவடிக்கைகள் 3) ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய பின்னூட்டச் செயல்பாடுகள் ஆகியவை இடபெற்றுள்ளன. இப்பாடப்பிரிவுகள் முதலில் 10 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டு, அவர்களது மாணவர்களுக்கான நோக்கங்களை முடிவுசெய்தபின் இந்த செயல்பாடுகளுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு, இச்செயல்பாடுகளுக்கான ஆதரவை நல்கி, பின்தொடர்வு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதன் பிறகு, ஆசிரியர்களோடு மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தி, அடுத்த கல்வியாண்டுக்கு இதை மேலும் மெருகேற்றும் பணியாற்றவேண்டும். முழுமையான வளங்குன்றாமைக் கல்விக்கான சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ள ஒரு வெளியை ஆல்ட்டர்சுகூல் இளைஞர்களுக்கு வழங்குகிறது என்பதை இந்தக் கல்வித்திட்டத்தின் மூலமாக இளைஞர்களை அறியச்செய்வது இதன் முதன்மையான நோக்கம்.
ஏப்ரில், மே மாதங்களில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு கோடை முகாம்களின் வாயிலாக இந்த ஆற்றுப் பாதுகாப்பு கல்வித்திட்டம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. இந்த கோடை முகாம்களைப் பிற நிறுவனங்கள் நடத்துகின்றபோதும், அவற்றுக்கான உள்ளடக்கதை வயலியின் ஆல்ட்டர்சுகூல் குழு வழங்குகிறது. பல்வேறு கோடைச் செயல்பாட்டு முகாம்களுக்கான தொழில்நுட்பத் திறப்பாட்டை ஆல்ட்டர்சுகூல் வழங்குகிறது எனலாம். வல்லுனர்களும் வயலியின் பிற அங்கங்களிலிருந்து வருவதால், முகாம்களை நடத்த வெளியாட்களைச் சார்ந்திருக்கவேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, வயலியின் கிராஃப்டில்லா அணியைச் சேர்ந்த கோபாலன் மண்ணால் வண்ணம்பூசுதல், பானை வனைதல் ஆகிய பயிற்சிகளையும், நாட்டாரியல் அணியிலிருந்து சஞ்சீவாவும் அவரது கூட்டாளிகளும் மக்களிசைப் பாடல்களுக்கான பயிற்சியையும் நடத்துகின்றனர்.
ஆறு குறித்த விழிப்புணர்வுச் செயல்பாடுகள்
நிலா ஆற்றைக் குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளிடம் ஆல்ட்டர்சுகூல் திட்டம் எப்படி ஏற்படுத்துகிறது? புழயாளி முகாமுக்குச் சென்றிருந்தபோது பல்வேறு சுவையான, வேடிக்கையான வழிகளில் ஆற்றைக் குறித்த பல்வேறு கூறுகள் குழுந்தைகளுக்கு எப்படி மெல்லமெல்ல அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டேன்.
ஆற்றை அறிமுகப்படுத்துதல்
6 வயது முதல் 18 வயதிலான சிறார்களுக்கு ஆற்றையும் ஆற்றங்கரையோரமுள்ள பல சமூகங்களை ஆறு எப்படி குன்றா வளங்களை வழங்கிக் காக்கிறது என்பதையும் அறிமுகப்படுத்துவதோடு கோடை முகாமின் முதல் நாள் தொடங்கியது. ஆற்றைக் குறித்தும், ஆறுசார் சமூகங்களைக் குறித்துமான எல்லாத் தகவல்களையும் வயலியின் ஆய்வுக்குழுவான ‘நிலா செயற்குழு முன்னெடுப்பு’ (TeNAG – நி.செ.மு.) வழங்கியது.
கல்பாத்தி கிராமத்தில் நிலா ஆறு
கிராமங்களுக்குச் சென்று கணக்கெடுப்பு நடத்துதல்
களத்திலிருந்து தரவுகளை இளம் ஆய்வாளர்கள் சேகரிக்கின்றனர்; ஒளிப்பட உதவி: சரத் K R
குழுந்தைகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அன்றைய நாள் அவர்கள் சென்று சந்திக்க வேண்டிய சமூகத்தினரிடம் தகவல் திரட்ட ஏதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும், சற்றே மூத்த குழந்தைகள் அணித் தலைவர்களாகச் செயல்பட்டனபட்டனர். சமூகக்குழுக்களைச் சந்திக்கச் சென்று, அவர்களது குடிநீராதாரங்கள் குறித்தும், நீர் சார்ந்த இடர்ப்பாடுகள் குறித்தும் வீடுவீடாக எல்லாரும் சென்று கணக்கெடுப்பு நடத்த வழநடத்தும் பொறுப்பு அணித்தலைகளுக்கு இருந்தது. கிராமங்களுக்குச் சென்று நடத்தப்படும் இந்த ஆய்வுகளின் இறுதியில், சிறு ஒட்டுதாள்களில் குழந்தைகளின் பின்னூட்டங்களை எழுதச்சொல்லி, ஒரு பெரிய தாளில் சேர்த்து ஒட்டினர்.
ஒட்டுதாள்களில் இளையவர்கள் திரட்டிய தகவல்களும் உணர்வுகளும் –
கிராமங்களில் அவர்கள் கேட்டதும், பார்த்ததும், நுகர்ந்ததும், உணர்ந்ததும்.
இந்த ஒட்டுதாள்களை மேலோட்டமாகப் பார்த்தாலே, குழந்தைகள் எத்தனை செறிவான தகவல்களைத் திரட்டி எத்தகைய உணர்வுகளை அடைந்தார்கள் என்பதை உணரலாம். குழந்தைகள் அரிதாகவே சந்திக்கும் சமூகக்குழுக்கள் மீது மடியும் ஆறு செலுத்தும் தாக்கம் குறித்துக் காட்ட வேறு சிறந்த வழி இருக்கமுடியாது. மடியும் ஆறு எப்படி மரபார்ந்த வாழ்வாதாரங்களைச் சார்ந்துள்ள சமூகக்குழுக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதைக் கண்டதோடு மட்டுமன்றி, நீர் என்ற மதிப்புமிகு அரிய வளத்தைப் பேண வேண்டியதன் அவசரத் தேவையையும் அறிந்துகொண்டனர். குடிநீர் மிக எளிதாகக் கிட்டும் தங்களது வளமான வாழ்க்கைமுறை கிடைக்கப்பெற்றதற்குத் தாங்கள் எத்தகைய நல்வாய்ப்பும் நல்லருளும் பெற்றவர்கள் என்பதையும் குழந்தைகள் உணர்ந்தனர்.
கிராமம் சென்றுவந்தபின் ஒரு குழு தங்கள் அனுபவங்களைக் குறித்து உரையாடுகின்றனர்
மண்ணால் வண்ணம் தீட்டுதல்
கிராமத்தில் உணர்வுப்பூர்வமான, கடுமையான வேலைக்குப் பிறகு, குழந்தைகளுக்கு மண்ணால் வண்ணம் தீட்டும் வேடிக்கை நடவடிக்கை வழங்கப்பட்டது. இந்தச் செயல்பாட்டில் இறங்கும் முன்னர், அவர்கள் வண்ணம் தீட்டப் பயன்படுத்துவுள்ள மண் ஆற்றங்கரையில் இருந்து கொணரப்பட்டது என்பது அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆனைமலையில் ஊற்றெடுக்கும் இந்த ஆறு பாய்ந்து பாறைகளை உடைத்து, மண்துகள்களாக மாற்றி, ஆற்றுப் படுகைகளில் படியச் செய்ய எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினர். இந்த மண்தான் கும்பர் போன்ற குயவர் சமூகத்தினர் மண்பாண்டங்கள் வனைந்து வாழ்க்கை நடத்த உதவுகிறது. பாறைகளின் வெவ்வேறு பகுதிகள் எப்படி மண்ணுக்கு வெவ்வேறு நிறத்தைத் தருகின்றன என்பதும் விளக்கப்பட்டது. குழந்தைகள் பல்வித வண்ணங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்தினார். ஒரு சித்திரம் ஆயிரம் சொற்களைப் பேசும் என்பர். எனவே சில சித்திரங்களை வாசகர்களிடம் அவ்விளையோரின் படைப்பாற்றல் குறித்து நேரடியாகப் பேசட்டும் என்று விடுகிறேன்!
மண் வண்ணப் பூச்சிலிருந்து சில அழகான காட்சிகள்
பானைசெய்தல், மண்பாண்டங்கள் வனைதல்
ஆற்றோடு நெருங்கிய தொடர்பு குயவர்களுக்கு உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து நிலாவாறு கொணரும் களிமண்ணைக் கொண்டு மண்பாண்டங்களை வனைந்து அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்கின்றனர். அரங்கோட்டுக்கரையில் குயவர் சமூகத்தைச் சேர்ந்தவரும் வயலி அமைப்பினருமான திரு.கோபால் குழந்தைகளுக்கு பானைகளை அறிமுகம் செய்தார். அவர்களது பணி வேறொரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. (/article/nila-a-river-and-its-relationships/#.XRba5-gzY2x)
ஈர மண்ணோடு விளையாடி ஏதையேனும் படைத்தல் பெரியவர்களுக்குமே பேரானந்தம் தரக்கூடியது. குழந்தைகள் பலவகைப் பாண்டங்கள் செய்வதற்குக் குழுக்களாகப் பணியாற்றினர். அந்த அமர்வின் முடிவில், ஒவ்வொரு அணியும் அவர்கள் செய்த பொருள்களைக் கொண்டு ஒரு கதை பிண்ணிச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவர்கள் தன்னிச்சையாகச் சொல்லிய கதைகளைக் கேட்கப் பேருவகையாக இருந்தது. தனிப்பட்டமுறையில் எனக்கு என் மழலைப் பருவத்துக்குத் திரும்பியது போலிருந்தது.
ஆற்று மண்ணில் திளைத்திருக்கும் குழுந்தைகள்
சகடத்தில் ஒரு கை பார்த்தல்…பானைச் சகடம்! ஒளிப்பட உதவி: சரத் K R
கழிவுகளைப் பயன்படுத்துதல்?
அகல்யா மரபுமுறை வளாகத்தைச் சுற்றிலும் விரவிக் கிடக்கும் இயற்கைப் பொருள்களைத் தேர்ந்தெடுத்து, தாள்களில் ஏதேனும் படைப்புகளை உருவாக்குமாறு குழந்தைகளைப் பணித்தனர். இயற்கையன்னைக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கம் அவர்களது கலைப்படைப்புகளில் வெளிப்பட்டது; அவர்களைக் குதூகலிக்கச்செய்யும் பருவங்களும் இயற்கை வாழ்வியலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருந்தன. தென்னை நார்கள், தென்னை ஓலைகள், சருகுகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களது படங்களுக்கு வெவ்வேறு வண்ணங்கள் கொடுக்கப்பட்டன.
இயற்கைப் பொருள்களால் செய்யப்பட்ட படைப்புகள்
ஆற்றோடு உறவாடுதல்
குழந்தைகளை கல்பாத்தி கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். கல்பாத்தி கிராமம் தேர்த் திருவிழாவுக்கும், இசைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்ற பாலக்காட்டு பிராமண கிராமம். வறுமையில் உள்ள அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, பாலக்காட்டின் வசதியான மக்களும் ஆற்றைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதைக் காட்டினர். ஆற்றங்கரைகளில் கொட்டப்பட்ட குப்பைகளைக் காட்டி, பெரும் தொழிற்சாலைகள் மட்டுமன்றி பொதுமக்களும் எப்படி ஆற்றை மாசுபடுத்துகின்றனர் என்பது விளக்கப்பட்டது. வீட்டுக் கழிவுகளை வரைமுறையின்றி ஆற்றில் கொட்டுவதால் விளையும் தீங்கு குறித்த விழிப்புணர்வை தங்களது குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் எட்டச்செய்வதன்மூலம், ஆறு மேலும் சீர்கெடுவதைத் தடுப்பதற்குத் தனிநபர்களும் செயல்பட முடியும் என்பதை உணர்ந்தனர்.
கல்பாத்தி கிராமத்தில் நிலாவாற்றில் கொட்டப்பட்டுள்ள வீட்டுக்கழிவுகள்
குழந்தைகள் குழந்தைகள் தாமே? விரைவிலேயே இந்த சோகக் காட்சிகளையெல்லாம் மறந்துவிட்டு ஆற்றை நோக்கியோடி நீரிரைத்துக் குளித்து விளையாடினர். திடீர் மீன்வலைகளும் தயாராகிவிட்டன! எல்லா அணிகளும் கோடை முகாமின் போது தங்களுக்குப் பிடித்தமான கணங்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள வந்தபோது, ஆற்று நீராடலையே எல்லாரும் நினைவுகூர்ந்தனர் என்பதிலேயே இதன் தாக்கத்தை அளவிடலாம். இயற்கையோடு நெருக்கமாக உணர்ந்து அதன் வளம்பேண உழைப்பதற்கு ஊக்குவிக்க, குழுந்தைகளையும் இளைஞர்களையும் நேரடியாக இயற்கையோடு பிணைக்கவேண்டியதன் இன்றியமையாமையை இது காட்டுகிறது.
வேடிக்கையாக நீராடுதல்
நிலாவாற்றின் மடியில்
கோலம் வரைதல்
சூழலியல் கூறுகள் மட்டுமன்றி, ஆறு சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் இச்செயல்பாடுகள் கவனப்படுத்தின. காலையில் துயிலெழுந்ததுமே குழந்தைகளைக் கோலம் வரையச் செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் இல்லங்களின் வாசல்களில் எப்படி நுட்பமான கோலங்களை அரிசி மாவால் வரைகின்றனர் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ளச் செய்யமுடிந்தது. எறும்புகளுக்குத் தீனியாகவும் கோலத்தின் அரிசி மாவு ஆவதையும் குழந்தைகளுக்குத் தெரிவித்தனர். மிக நுண்ணிய உயிர்களிடத்தும் அன்புசெலுத்தும் பண்பாடு இது என்பதைக் குழந்தைகள் கண்டனர்.
குழந்தைகள் கோலம் வரைகின்றனர்
மக்களிசைப் பாடல்கள் மூலம் இணைத்தல்
சஞ்சீவும் அவரது குழுவினரும் பாடிய நாட்டுப்புற பாடல்கள் குழந்தைகளை அவற்றின் தாளத்துக்கேற்ப ஆடிப்பாட வைத்தன. மூங்கிலாலும் நிலா ஆற்றோரம் காணப்படும் பிற மூலப்பொருள்களாலும் செய்யப்படும் இசைக்கருவிகள் பற்றியும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தனர்.
வயலியின் மக்களிசைக் குழு; ஒளிப்பட உதவி சரத் K R
இச்செயல்பாட்டை நீடிக்கச்செய்தல்
ஆல்ட்டர்சுகூல் இச்செயல்பாட்டினைக் குழந்தைகளிடையே தலைமைப்பண்புகளை வளர்ப்பதன் மூலம் நீடிக்கச் செய்ய முனைகிறது. அவர்கள் பயிற்றுவித்த குழுக்களிலிருந்து இளம்தலைவர்களைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதன் மூலம் இதைச் செய்தனர். உதாரணமாக, இறுதி நாள் நிகழ்வுகளைத் திட்டமிட்டு, குழந்தைகளின் அணிகளையும் பல்வேறு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்ட துணைக்குழுக்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் பொறுப்பு அபிராமிக்கும் ஸ்ரீலட்சுமிக்கும் வழங்கப்பட்டது.
இளம்தலைவர்களிடம் உற்சாகமான ஒரு தருணத்தைப் பகிர்ந்துகொள்ளும் சரத்
முகாம் நடந்த ஐந்து நாட்களிலுமே, குழந்தைகளுக்கு இது அவர்களது கோடைமுகாம் என்றும் அகல்யாவுடையது அல்லவென்றும் நினைவூட்டிக்கொண்டே இருந்தனர். முகாமை நடத்துவதற்கான பொறுப்பைக் குழந்தைகளே ஏற்றுக்கொள்ளப் படிப்படியாகப் பயிற்றுவிப்பதற்கு இது ஓர் அழகிய வழி. இவ்வாறாக, விளக்குகள் சரியான நேரத்தில் அணைக்கப்படுவதையும், தேவைப்படும்போது, மேடை நிகழ்ச்சிகளின்போது, கூடுதல் விளக்குகளையும் ஒலிக்கருவிகளையும் ஏற்பாடு செய்வதையும் ஒளி–ஒலிக் குழுவினர் உறுதி செய்யவேண்டியிருந்தது. துயிலெழுப்பும் குழு எல்லோரையும் சரியான நேரத்தில் எழுப்பி, அன்றைய நாளின் நிகழ்வுகள் குறித்த நேரத்துக்குத் தொடங்க வழிசெய்யவேண்டும்; தூய்மைக் குழு செயல்பாட்டு அறை, உணவருந்தும் அறை ஆகியவை எல்லாச் செயல்பாடுகளும் முடிந்தபிறகு தூய்மையாக விடப்படவும், எல்லாரும் தங்களது தட்டுகளைக் கழுவி, எச்சங்களைக் குப்பைத் தொட்டியில் போடவைக்கவும் பொறுப்பேற்கவேண்டும்; உணவுக் குழுவினர் உணவை ஏற்பாடு செய்வதற்கும், பரிமாறுவதற்கும், உணவுக்குத் தேவையான அளவுகளையும் உணவுவகைகளையும் உணவுவழங்குநர்க்குத் தெரிவிப்பதற்கும் பொறுப்பேற்கவேண்டும்; கலை–கைவினைக் குழு இச்செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் பொருள்களைத் தருவிக்கவும், எல்லாவற்றையும் அவ்வவற்றின் கூடைகளில் திரும்ப வைக்கவும் மேற்பார்வையிட வேண்டும்; இறுதியாகக் கலைநிகழ்ச்சிகள் குழு. குழந்தைகள் அவர்களுக்குத் தரப்பட்ட பொறுப்புகளையும் செயல்களையும் எவ்வளவு அற்புதமாக ஏற்றுநடத்தினார்கள், துணைக்குழுக்களுக்குள் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எப்படித் தீர்வு கண்டார்கள் என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. பெரும்பாலான குழந்தைகள் கோடை முகாம்களுக்கு ஆண்டுதோறும் வருவார்கள் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். இவ்வாறு தொடர்ந்து பங்குபெறும் குழந்தைகளின் தலைமைப்பண்புகளை வளர்த்து மேலும் பெரும் பொறுப்புகளும் செயல்களும் வரும் ஆண்டுகளில் தருவதற்கும், வயலி நடத்தும் ஆறுபேணுதல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தவும் ஆல்ட்டர்சுகூல் திட்டமிடுகிறது. நிலாவாறு பிறப்பித்து வளர்த்துவந்துள்ள சூழலியலையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு, இளம் தன்னார்வலர்களின் தொடர்ச்சியானதொரு நிரையை உறுதிசெய்ய இதன்மூலம் அவர்கள் சாத்தியமாக்குகின்றனர்.
எதிர்காலத் திட்டங்கள்
குழந்தைகளிடமிருந்து வந்த கருத்துகளின் அடிப்படையில், ஆல்ட்டர்சுகூல் இந்தப் பாடத்திட்டத்தை மெருகேற்றி, நிலாவாற்றின் கரையில் அமைந்துள்ள 10 பள்ளிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடுகிறது; இப்பள்ளிகளுடன் ஏற்கனவே பிற செயல்களின் மூலம் ஓர் உறவு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஆசிரியர் பயிற்சிப் பயிலரங்கு நடத்தப்படும். மீண்டும் மீண்டும் சில கருத்துகளை வலியுறுத்துவதன்மூலம் அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளச் செய்யமுடியும் என்ற கருதுகோளின் அடிப்படியில், பல்வேறு செயல்பாடுகள் கொண்ட இத்திட்டத்தைக் கல்வியாண்டு முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கு இதை மேலும் செறிவாக்க, டிசெம்பர் மாதம் ஒரு மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும். மேலும் பல பள்ளிகளும் இதில் சேர்க்கப்படுவர். அடுத்த 3-4 ஆண்டுகளில், கேரளத்தில் பாரதப்புழா ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ள 131 கிராம ஊராட்சிகளிலுள்ள 170 அரசு/அரசு உதிவிபெறும் பள்ளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த வயலி விரும்புகிறது. நாளடைவில், குழந்தைகள், இளைஞர்களுக்கான பாரதப்புழா மாநாடு நடத்தி, பழைய தலைமுறைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்களுக்குப் பதிலாக, பள்ளி–கல்லூரி மாணவர்களை மையப்படுத்தத் திட்டமிடுகின்றனர்.
ஆற்றைப் பேணுவதற்கான இப்பாடத்திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிற நிறுவனங்கள் அவரவர் உள்ளூர் தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இதைத் திறவூற்றுப் பொதுவளமாக மாற்றவும் திட்டமுள்ளது. வயலியின் ஆய்வுக் கிளையான TeNAG (நி.செ.மு)ஐ வளர்த்தெடுத்து, ஆற்றோரம் பணியாற்றும் எல்லா அமைப்புகளின் தரவுத்தளத்தை உருவாக்கவும் திட்டமிடுகின்றனர். தற்போது ஆற்றோரமுள்ள 131 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 120 அமைப்புகள் குறித்த தகவல்கள் இத்தரவுத்தளத்தில் உள்ளன. நிலா அறிவுசார் மையத்தை நேரடிப் பண்பாட்டு ஆவணமாக்கல் வடிவில் அமைக்கவுள்ளனர். இதன்பொருட்டு ஏற்கனவே ஆற்றின் பல்வேறு கூறுகளை – ஆற்றுத் தாவரவியல், பறவை வகைகள், ஆற்றோர நிலவியல் முதலானவற்றை ஆய்வுசெய்து இயற்றப்பட்ட முனைவர் படிப்பு ஆய்வேடுகளைச் சேகரித்துள்ளனர். இணையத்தில் திறவூற்றுப் பொதுவளமாக ஆற்றின் வரைபடத்துடன் இத்தகவல்களை இணைத்துப் பதியப்படும். இதன் மூலமாக, புழக்கூட்டம், புழயாளி போன்ற முன்களப் பணியாளர்களோடு, இணையம் மூலமாக ஆற்றுப்பாதுகாப்பு குறித்த ஒத்து ஆர்வமுடையவர்கள் இணைவதற்கு வரலி ஓர் இணையதளத்தை உருவாக்க நினைக்கிறது.
கேரளத்தில் பாய்ந்தோடும் இந்த ஆறு சார்ந்த வளமான பண்பாடு, சூழலியல் வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினரை ஆற்றோடு பிணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் நிலாவாறு அழிந்துவிடாதபடி பாதுகாக்கும் ஒரு புதிய தலைமுறை உருவாகிவரும் என்று வயலி நம்புகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டுவிட்டபோதும், இயற்கையன்னையிடம் பரிவுடன் இருந்து, அவள் மனிதகுலத்துக்கு எதை அளிக்கக்கூடியவள் என்றுணர்ந்து, ஆற்றினை அழியவிடாது காக்கும் இளைஞர்களை இத்தகைய கல்வி உருவாக்க முனைகிறது.
Read the Malayalam translation here.
Contact the author
[1] நாட்டுநலப்பணித் திட்டம் (NSS) – இந்திய அரசு உதவியுடன் நடக்கும் பொதுப்பணித் திட்டம். இதை இந்திய ஒன்றிய அரசின் இளைஞர்கள் நலத்திற்கும் விளையாட்டுக்குமான அமைச்சகம் நடத்துகிறது.