மருதம் பண்ணைப்பள்ளி: இருப்பினூடே ஒரு பரிணமிப்பு (in Tamil)

By Translated by த.கண்ணன் (Original story by Inanc Tekguc)onJan. 07, 2016in Learning and Education

மருதம் பண்ணைப்பள்ளியில் அருண் வீட்டில் நுழைந்ததுமே, ஒரு புதிய, ஆனால், வரவேற்கும் சூழலில் இருக்கிறேன் என்பது புரிந்தது. மைய அறையில் சிலரது ஆனந்த ஆரவாரம் இருந்தது: பல பண்டங்கள் கொண்ட இரவு உணவினை கார்த்திக் சமைத்துக் கொண்டிருந்தார்; பூர்ணிமா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார் – தன் பழங்குடியின நண்பர்களிடம் கற்றுக்கொண்ட புதிய பாடலை, பள்ளியில் தனது மாணவர்களோடு பாடுவதற்காக மனமியைந்து பயிற்சி செய்துகொண்டிருந்தார்; கடந்த வார இறுதியில் கடலாமைநடை எப்படிச்சென்றது என்பதை அறிய அருகாமையிலிருந்து லீலா வந்திருந்தார்; இரண்டு தவளைகள் பலவித புத்தகங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்த புத்தக அடுக்கிலிருந்து குதித்தோடின; இரண்டு நாய்கள் என்னதான் நடக்கிறது என்று எங்களைச் சுற்றி கேள்விக்குறியோடு பார்த்துச்சென்றன; 5 மணிநேர பேருந்துப்பயண தொலைவிலிருந்த சென்னையில் கடலாமை நடை முடித்துவந்த எங்களது புதிய ஆர்ப்பரிப்பும் கும்மாளமும் அங்கு சேர்ந்து கொண்டன. (அருண் சென்னையில் தன்னார்வலர்கள் பங்கேற்பில் இயங்கும் கடலாமைப் பாதுகாப்பு அமைப்பினை 18 ஆண்டுகளாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார். திருவண்ணாமலைக்குப் பண்ணைப் பள்ளிக்காக இடம்பெயர்ந்தபிறகும், இந்த தன்னார்வப் பணியைத் தொடர்வதற்காக, அனேகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னை சென்று வருகிறார்.) ஒரு வண்ணத்தட்டிலுள்ள நிறங்களைப்போல பல்வேறு விதமான மனிதர்கள் என்னை இங்கே சூழ்ந்திருந்தனர்; ஆனாலும், பண்ணைப் பள்ளியில் ஓர் ஓவியம் போல எல்லோரும் இழைந்து பொதுவான ஓர் இருப்பை அடைந்திருந்தனர்.

Arun playing table tennis with his son Madhavan
அருண் தன் மகன் மாதவனோடு டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்

இந்தப் பண்ணைக்கு நான் மட்டுமே புதியவன் அன்று. பல்வேறு பயணிகளும் பள்ளிக்கு வந்து, மாணவர்களைத் தங்கள் பலதரப்பட்ட சுவாரசியமான பின்னணிகளுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தனர்; இது வருடம் முழுவதும் நடைபெறுகிறது. சாமுவேல் என்கிற பிரெஞ்சு அசைவூட்டக் கலைஞர் அவர்களுள் ஒருவர்; இரண்டாவது முறையாக அங்கு வந்திருந்தார். சென்ற ஆண்டு குழந்தைகளோடு உருவாக்கத்தொடங்கியிருந்த ஓர் அசைப்படத்தை (animation movie) முடிப்பதற்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். சில மாதங்களாக மாணவர்கள் படப்பிடிப்பு நடத்தி எடுத்திருந்த ஒரு பேசாப்படத்தைத் தொகுப்பதற்கு உதவிக்கொண்டிருந்தார். பிரஞ்சு தேசத்தித்திலிருந்து வந்திருந்த இன்னொருவர் – இசைக்கலைஞர் சொலேன் (Solenne). தனது அக்கார்டியனோடு (accordion) சொலேன் சில வகுப்புகளுக்குச் சென்றார்; பின்னர், மாணவர்களோடு இணைந்து பேசாப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்தார். அந்த நகைச்சுவைப் படத்தின் முதல் திரையிடலை சொலேனின் நேரலைப் பங்களிப்புடனும், குழந்தைகளின் ஆரவாரமான சிரிப்பொலியுடனும் கண்டது சிலிர்க்கவைக்கும் அனுபவமாக அமைந்தது. குழந்தையாக இருந்தபோது பலதேசத்துப் பயணிகள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து எங்களோடு சுற்றிக்கொண்டிருந்திருக்கக்கூடாதா என்கிற ஆதங்கம் என்னுள்ளும் எழுந்தது. மேலும், அங்கு ஏற்கனவே தங்கியிருந்த தண்மையான தன்னார்வலர்கள், நுண்கலைகள், கைவினைகள், நாடகம், தற்காப்புக்கலைகள், சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பிற அன்றாடப் பள்ளிப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஆகியோருக்குக் கூடுதலாகத்தான் இப்படிப்பட்ட மாறுபட்ட மனிதர்கள்.

Samuel and Alice (founder-teacher) editing the silent film together with the students
பேசாப்படத்தை மாணவர்களோடு இணைந்து தொகுத்துக்கொண்டிருக்கும் சொலேனும் ஏலிஸும் (நிறுவனர்- ஆசிரியர்)
Solenne, a French volunteer visitor of the school contributing live soundtrack for the first screening of a silent film produced by the students
மாணவர்கள் தயாரித்த பேசாப்படத்தின் முதல் திரையிடலின்போது நேரலைப் பின்னணி இசை வழங்கிக்கொண்டிருக்கும் பிரெஞ்சு தன்னார்வப்பயணி, சொலேன்
Sewing is one of the many skills students gain in Marudam
மருதம் பள்ளியில் மாணவர்கள் பயிலும் பல்வேறு திறன்களில் தையலும் ஒன்று

மாணவர்களின் பின்னணிகளுமே பலதரப்பட்டவை. அண்மைக் கிராமங்களிலிருந்துமோ, திருவண்ணாமலை நகரிலிருந்துமோ, பண்ணையிலேயே தங்கியிருந்தோ வருகின்றனர். சில குழந்தைகள் வேற்று நாட்டவராகவும் இருப்பது ஆர்வங்கள், திறன்கள், மொழிகள், நோக்குகள் ஆகியவற்றில் வேற்றுமையைப் பெருக்கியுள்ளது. நான் அந்த பண்ணையில் செலவழித்த காலம் பலவயதுகளிலுள்ள ஆன்மநண்பர்களோடான உரையாடலில் கழிந்தது குறிப்பிடத்தகுந்தது. கட்டடக்கலை, உழவு, சமூகவாழ்வு, திருவண்ணாமலை மற்றும் இந்திய வரலாறு, சிப்ரஸ் நாட்டு வரலாறு, அதன் செடிகள் விலங்குகள் என்று பலவித பேசுபொருள்களில் எங்கள் உரையாடல்கள் விரிந்தன. அருணின் முடிவற்ற அறிவுத்தேடலும், பசியும் பள்ளிக்குழந்தைகளையும் தொற்றிக்கொண்டுள்ளதாகத் தோன்றியது. அருண் நடத்தும் சில வகுப்புகளில் அமரும் வாய்ப்பு கிடைத்தபோது, அன்றாட பாடத்திட்டத்தின்படி அல்லாமல், விவாத அரங்குகள் அமைந்து எனது தீவின் புவியியல், வரலாறு, அரசியல் பற்றிப் பேசினோம்; இளஞ்சிறார்களிடமிருந்து ஆர்மாக எழுந்த பல வினோதமான கேள்விகளை எதிர்கொண்டேன். எங்கள் குடும்பம், வாழ்க்கைமுறை, பொதுவாக சிப்ரஸ் குறித்த சில நிழற்படங்களைக் காட்டினேன். எங்களுடைய உரையாடல்களின் முக்கிய அம்சங்களை விரிவாக மாணவர்கள் கூறுவதைக் கேட்டதும், தன்னுடைய உற்சாகத்தை ஒரு மாணவன் வீட்டில் தனது பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டதையும் அறிந்ததும் எனக்கு இனிய ஆச்சரியமூட்டின.

2012 முதல், ஆரம்பக் கல்வி ஆணையத்திடமிருந்து ஐந்தாம் வகுப்புவரை இயங்க மருதம் பள்ளி அங்கீகாரம் பெற்றது. சென்ற ஆண்டு மேலும் சில வகுப்பறைகளும், ஒரு நூலகமும், சோதனைக்கூடமும் எட்டாம் வகுப்புவரை இயங்குவதற்கு அங்ககீகாரம் பெறும் முனைப்பில் கட்டப்பட்டுள்ளன. கட்டடத்தின் பாதுகாப்புக்கான சான்றிதழ், தீயணைப்புத்துறைச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ் போன்ற தமிழக அரசின் இறுக்கமான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதுடன், இந்த அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கொருமுறை புதுப்பிக்கப்படவும் வேண்டும். பள்ளியின் நிறுவனர்கள் பள்ளி சீராகச் செயல்படுவதற்காக இந்த நீண்ட, கடும் பயணத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Students on a treehouse they built on their own initiative
தங்களது சுயமுனைப்பில் கட்டிய மரவீட்டில் மாணவர்கள்

இந்த இடத்தில் ஒரு பொதுவான நல்லிருப்பை என்னால் உணரமுடிந்தது; இந்த இடம் என்பதை வளைந்த சுவர்கள், வட்ட வாயில்கள், கதவுகளற்ற வகுப்பறைகள் என்று பௌதிகமாக வரையறுக்கலாம்; ஆனால், ஓர் ஆன்மநோக்கில், குழந்தைகளின் சிரிப்பொலியும் ஆசிரியர்களின் சிரிப்பொலியும் ஒருசேர நிறைந்திருக்கும் ஓர் இடமாகவே சித்தரிக்கமுடியும். அருணின் இல்லத்தில் இருந்த சமுதாய உணர்வு பள்ளியில் விரவியிருக்கக் கண்டேன்; பல்வேறு வயது வரம்பினிரிடையே அன்பும் அரவணைப்பும் மிகுந்த உறவாடல் இருந்தது. சமவயிதினிருடனான சில வகுப்புகள் இருந்தாலும், வெவ்வேறு வயதினர் சேர்ந்து பங்கேற்கக்கூடிய செயல்பாடுகள் பலவும் பள்ளிக்குள்ளிலிருந்து தொடங்கி விரிந்தவண்ணம் இருந்தன. அவற்றில் ஒன்றாக, இயற்கை வேளாண் நிலத்தில் மாணவர்கள் அவ்வப்போது பேணிப்பணியாற்றி பள்ளிக்கான உணவுத்தேவையில் 80 விழுக்காட்டை விளைவிக்கின்றனர்; உள்ளூர் நீச்சல் குளமொன்றிற்குக் குழுக்களாய்ச் சென்று விளையாடி ஆசிரியர்களிடமிருந்தும், பிற நண்பர்களிடமிருந்தும் நீச்சல் கற்றுக்கொள்கின்றனர்; மேலும், பூங்காவனம் உள்ளது; ‘அறிவுக் குன்று’ என்றறியப்படும் புனித அருணாச்சல மலை உள்ளது; அங்கு ஒவ்வொரு வாரமும் ஓர் அரைநாள், குழுவாக மலையேற்றம் செய்வதற்கும், தனிமையில் கழிப்பதற்கும், அவ்விடத்தின் பன்மயத்தில் தம்மை ஆழ்த்திக்கொள்வதற்கும் செல்கின்றனர்.

Students and teachers singing songs at the park before they start their weekly hike
வாரந்திர மலையேற்றம் துவங்கும்முன் மாணவர்களும் ஆசிரியர்களும் பூங்காவில் பாடுகின்றனர்
Creative approaches have been used in the school’s architecture
பள்ளியின் கட்டட வடிவமைப்பில் படைப்பூக்கம் மிகுந்த அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன
Kindergarten students helping out with the peanut harvest
கடலை அறுவடையில் உதவும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
One of the students observing the birds during the weekly solitary nature time in the park
பூங்காவில் இயற்கையோடு தனிமையில் இருக்கும் வாராந்திர நிகழ்வின்போது பறவைகளைக் கவனிக்கும் ஒரு மாணவர்
Students and teachers do not feel confined within walls of a classroom
வகுப்பறைகளின் வரம்புகளுக்குள் மாணவர்களும் ஆசிரியர்களும் அடைபடுவதில்லை
A group photo from a group hike up the Arunachala hill
அருணாச்சல மலையில் குழுவாக ஏறும்போது எடுத்த படம்

இவர்களது பூங்கா ஒரு குப்பைக்கூளமாக ஒரு காலத்தில் இருந்தது; கோவிந்தா, லீலா (மருதம் பள்ளியின் நிறுவனர்களில் இருவர்) போன்ற சிலர் இந்த இடத்தை தம் மேற்பார்வையில் எடுத்து ஒரு வளரும் கானகமாக மாற்றினர்; இப்பகுதியின் கடுமையான சூழலுக்கெதிரான பல்லாண்டுப் போராட்டத்திற்குப் பிறகே இது சாத்தியமாயிற்று. மரங்களை நடுவதற்கும் பேணுவதற்கும் இவர்கள் மேற்கொண்ட கடும் உழைப்பாலும், காட்டுத்தீயைத் தடுக்கும் முயற்சிகளாலும் இந்த வரண்ட மண்ணில் நாற்றுகள் வேரூன்றி, மலையைச் சுற்றிலும் காடுகள் மீண்டன. இப்போது இவர்களது nurseryல் 100க்கும் மேற்பட்ட நாட்டுரக மரங்களையும் செடிகளையும் வளர்த்துவருகின்றனர்; தொடர்ந்து காட்டின் பன்மயத்தைக் கூட்டிவருகின்றனர். அருகிலுள்ள விளையாட்டுவெளி கைவினையாக உருவாக்கப்பட்ட விளையாட்டுக் கருவிகளோடு உள்ளது; இதுதான் நகரின் ஒரே பொழுதுபோக்குத்தலம் என்பதால், பல நூறு மக்களை வார இறுதிகளில் ஈர்க்கிறது. தொடரும் கட்டமைப்புகளால், இவ்விடம் பல்வேறு விளையாட்டுகள், காட்சிப்படிமங்கள் மூலமாகக் குழந்தைகளைத் தங்கள் இயற்கைச்சூழலோடு இணைக்க முயலும்.

A local lady is working at the nursery of the park, arranging new saplings
பூங்காவில் நாற்றுகளைச் சீராக வைக்கும் ஓர் உள்ளூர்ப் பெண்

மருதம் பள்ளி இன்னும் மிகவும் இளமையானதுதான்; அது தன் இருப்பினூடே பரிணமிக்கிறது. அருண், பூர்ணிமா, கோவிந்தா, லீலா போன்ற படைப்புத்திறனும் ஊக்கமும் மிக்கவர்கள் அதைத் தம் குழந்தை போல் பாவித்துப் பேணிவருகின்றனர். இந்த முக்கியமான ஆண்டுகளில் குழந்தை மனங்களின் பாதைகளை எப்படி, எந்த அளவுக்கு நெறிப்படுத்துவது என்கிற கேள்விகள் அவர்களுக்குள் இன்னும் இருக்கின்றன. இக்கேள்விகள் எழும்போதே, குழந்தைகளோடும் அவர்களது பெற்றோர்களோடும் அவற்றிற்கான விடைகளைத் தேடுகின்றனர். எனது பார்வையில், குழந்தைகள் இப்பள்ளியில் நிறைய நன்மைகள் சூழ இருக்கின்றனர். பெரியவர்களின் பல்வேறு திறன்களையும் அறிதலையும் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது; சமவயதுத்தோழர்கள், பிறவயது மாணவர்கள், ஆசிரியர்கள், விருந்தினர்கள் என்று பலரும் அடங்கிய சுற்றத்தைத் தழாவுதலை அனுபவிக்கின்றனர்; புதுப்பிக்கக்கூடிய ஆற்றலில் பெருமளவு இயங்கும் இயற்கை வேளாண் சூழலிலும் அதன் பன்மயத்திலும் அவற்றின் மதிப்பினை உணர்த்தும் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுகின்றனர்; இயற்கையோடு ஒன்றுவதற்கு ஊக்கப்படுத்தப்படுகின்றனர்; பூங்காவின் மூலம் காடுகளை மீட்பதில் பங்காற்றுகின்றனர் – இது எந்த ஒரு மனிதருக்கும் ஒரு மகத்தான அனுபவம். மருதம் பள்ளியைத் தொடர்ந்து கவனித்து, அவர்களது வளர்ச்சியின் போக்கினைக் காண விரும்புகிறேன்.

Two kindergarten kids in the playground just outside the classroom
வகுப்பறைக்கு வெளியிலுள்ள விளையாட்டு வெளியில் இரண்டு தொடக்கப்பள்ளிக் குழந்தைகள்

Read original story in English, Marudam Farm School: Becoming while it is Being.

Story Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
%d bloggers like this: