பாசி கோத்துப் பயிலலாம்! (in Tamil)

By சாலை செல்வம்onJun. 07, 2018in Learning and Education

ஆரம்ப வகுப்பில் ‘நான், என் குடும்பம்’என்பதில் தொடங்குகிறது கல்வி. அடுத்து சொந்த ஊர், ஊரிலுள்ள விஷயங்கள், யார் எந்த மொழியில் பேசுகிறார்கள், யார் யார் எந்த உருவ அமைப்பில் இருக்கின்றனர் என்ற அடையாளத்தை அறிதல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பின் நீலகிரி மாவட்டத்தைப் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்துத் தமிழகம். பிறகு ஒட்டுமொத்த நாடு குறித்த அறிவு ஊட்டப்படுகிறது…..இப்படியாக செயல்பட்டுவருகிறது நீலகிரி மலையில் உள்ள கூடலூரைச் சேர்ந்த வித்யோதயா பள்ளி.

பூர்வகுடிகளான பெட்ட குறும்பர், முள்ளுக் குறும்பர், பனியர், இருளர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடி மக்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதிவாசி முன்னேற்றச் சங்கம் 1986 முதல் 1988 வரை நடத்திய இயக்கத்தின் மூலம் தங்களுக்கான நிலத்தை போராடிப் பெற்றனர். தங்களுடைய நிலத்துக்கு உரிமை கோரவும் அது குறித்து அரசாங்கத்தை அணுகவும் அவர்களுக்குக் கல்வி தேவைப்பட்டது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 1996-ல் தொடங்கப்பட்டதுதான் வித்யோதயா பள்ளி. இப்பள்ளியை நிறுவியது மட்டுமல்லாமல் கல்வி தொடர்பான வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள் ரமா, ராமதாஸ் தம்பதி.

அனைத்துப் பழங்குடியினக் குழந்தைகளுக்கும் கட்டாய – தரமான பள்ளிப் படிப்பு வழங்குதல், மாணவர்கள் விருப்பத்தோடு பயிலும் சூழலை ஏற்படுத்துதல், கல்விக்கான சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலை உறுதி செய்தல் போன்ற தொலைநோக்குப் பார்வையோடு ஆதிவாசி முன்னேற்றச் சங்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

அன்றாட வாழ்க்கையே பாடம்

“ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளியை ஆங்கில வழிப் பள்ளியாகத்தான் தொடங்கினோம். காரணம், பழங்குடியின குழந்தைகளுக்குத் தனி மொழியுள்ளது. அதனால் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே அயல்மொழிதான். அதேநேரத்தில் தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் பேசும் மொழியாக இருப்பதால், தமிழ் மூலம் கற்பது பயனளிக்கும். தற்போது இரு மொழிவழிப் பள்ளியாகச் செயல்படுத்திவருகிறோம்.

சமச்சீர்க் கல்விப் புத்தகங்களுடன் மாணவர்களின் கற்றல் – கற்பித்தலுக்காக நாங்களே வடிவமைத்த புத்தகங்களையும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றையும் புரிந்து, தெரிந்து செயல்படுதலை அடிப்படையாகக்கொண்டது எங்கள் பள்ளி” என்கிறார் ரமா.

சமச்சீர்ப் பாடத்தைப் பின்பற்றும் அதேவேளையில் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானவற்றையும் இணைத்து பிரத்யேகப் பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதேபோல கணிதத்தைப் பொறுத்தவரை முதல் வகுப்பில் 10 எண்கள்வரை மட்டுமே இங்கு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒப்பிடுதல், வித்தியாசப்படுத்துதல், கூட்டல், கழித்தல் போன்ற பாடங்களும் போதிக்கப்படுகின்றன. அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றனர்.

“எங்கள் பள்ளியில் படிக்கும் பழங்குடி குழந்தைகளின் கலைகள், பண்பாட்டை மையமாக வைத்து கல்வியை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்துகிறோம். வாழ்க்கையின் வழியாகக் கல்வியைப் புகட்டும்போது கற்பித்தலும் கற்றலும் எளிதாகிறது. தினமும் மாலை ஒரு மணி நேரம் கைவினைச் செயல்பாடுகளுக்காகவும் ஒரு மணி நேரம் விளையாட்டுக்காகவும் ஒதுக்குகிறோம். முதல் வகுப்பு மாணவர்கள் பாசி கோக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடும்போது ஏற்படும் மாற்றத்தை அவர்களே உணரும்படி செய்கிறோம்.

ஒரு வண்ணப் பாசியுடன் மற்றொரு வண்ணப் பாசியை கோத்துக்கட்டும்போது அவற்றுக்கு இடையிலான வண்ணம், அளவு வித்தியாசங்களை விளக்குவோம். ஆழமாகக் கற்றல், நேர்த்தியாகச் செயல்வழியில் கற்றல், அழகியலோடு செயல்படக் கற்றல், அனுபவித்துச் செயல்படுதல் என்கிற தாகூரின் கல்விச் சிந்தனையை இதன் மூலம் முதன்மைப்படுத்துகிறோம்” என்கிறார் ரமா.

மாணவ-மாணவி புரிதல்

பனியர் பழங்குடியினரின் பேச்சுமொழியைத் தமிழ் வரிவடிவத்தின் மூலம் பதிவு செய்து புத்தகம் ஒன்றை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முயற்சி அந்த மொழியை அழியாமல் ஆவணப்படுத்தியதோடு, அடுத்த தலைமுறையினர் அதை எடுத்துச் செல்லவும் உதவியாக உள்ளது. கலைகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள்.

“ஃபிரிஸ்பி (தட்டு எறிதல்) விளையாட்டை ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஊக்குவிக்கிறோம். மாணவ மாணவிகள் இணைந்து விளையாடுவதையும், விளையாட்டைத் தொடர்ந்து உரையாடுவதையும் முக்கியமானவையாகக் கருதுகிறோம். இந்த விளையாட்டை முன்னிட்டு இவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறார்கள்” என்கிறார் ஆசிரியை ஜானகி.

பழங்குடியினக் குழந்தைகளின் வாழ்க்கை அவர்களின் மூதாதையரைப்போல இல்லை. அதேநேரத்தில் பொதுச் சமூகத்தினுடையதைப் போலும் இல்லை. நாளுக்கு நாள் காடுகளின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே போவதால் காடுகளுக்கும் இந்த மக்களுக்கும் இடையிலான உறவிலும் பெரும் இடைவெளி ஏற்பட்டுவருகிறது. கல்வி மூலம் இவற்றைச் சீர்படுத்த இப்பள்ளி முயற்சிக்கிறது.

இடைநின்ற மாணவர்கள் ‘ஆதிவாசி முன்னேற்ற சங்க’த்தின் மூலமாகக் கல்வியைத் தொடர ரமா, ராமதாஸ் உதவுகிறார்கள். அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் உதவியுடன் இடைநின்ற மாணவர்கள் நூறு பேர் உறைவிடப் பள்ளியில் தங்கிக் கல்வியைத் தொடர்கின்றனர். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதும் இந்த மையம்தான். இவர்களுடைய தொடர் முயற்சியால் இந்தப் பகுதியிலுள்ள 70 சதவீதக் குழந்தைகள் 10-ம் வகுப்புவரை படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி பற்றி அறிய: https://adivasi.net/vidyodaya.php தொடர்புக்கு: [email protected]

கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: [email protected]


First published by The Hindu

Story Tags: ,

Leave a Reply

Loading...