உழைப்புக்கும் தமிழுக்கும் முதலிடம்! (in Tamil)

By சாலைசெல்வம் on June 7, 2018 in Learning and Education

கொ ல்லன்பட்டறை, செருப்பு தைக்குமிடம், நெசவு செய்யுமிடம்… இந்த இடங்களை மையமாகக் கொண்டு ஒரு பள்ளி செயல்பட முடியுமா? முடியும். இந்த இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் தொழிற்கருவிகள் குறித்த பாடத்தை சிறப்பாகக் கற்றுத்தர முடியும்.

மேற்கண்ட இடங்கள் எதுவும் நமக்கும் அந்நியமில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய இடங்கள்தான் அவை. அங்கு ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ உட்கார்ந்து அந்தத் தொழிலில் செலுத்தப்படும் உழைப்பை கவனிப்பது, தொழில் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்பது, பள்ளி திரும்பிய பிறகு அதை குறித்து உரையாடுவது, தாங்கள் பார்த்தது பற்றிப் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது, அவற்றை வரைவது, எழுதுவது என ஒரு சங்கிலித் தொடராகக் கற்றல் தொடர்கிறது. இந்தச் செயல்பாடுகள் எதிலும் மாணவர்கள் சோர்ந்து போவதில்லை, மாறாக உற்சாகம் பெறுகிறார்கள்.

தொழிற்பட்டறைகளுக்கும் விளைநிலங்களுக்கும் குழந்தைகளுடன் இப்பள்ளியின் ஆசிரியர்கள் செல்வது வாடிக்கை. கொல்லன்பட்டறைக்குப் போன மூன்றாம் வகுப்புக் குழந்தை, பஞ்சர் ஒட்டும் கடையில் தான் பார்த்ததை பற்றியும் வகுப்பில் விவரித்துக்கூறும் திறனைப் பெற்றுவிடுகிறாள். இதன்மூலம் குழந்தைகள் தொழிலை மதிக்கக் கற்றுக்கொள்கின்றனர் என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி.

சாந்தி

இவ்வாறு சமூகத்தில் புழங்குகிற பாடல், ஆடல், உணவு, தொழில், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக்கொண்டு கல்வியை எடுத்துச்செல்கிறது சங்கரன்கோவிலில் செயல்பட்டுவரும் தாய்த் தமிழ்ப் பள்ளி. பதினெட்டு ஆண்டுகளாக இப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 1993-ல் தனியார் பள்ளிகள் வழி ஆங்கில வழிக்கல்வி பெரிய அளவில் பரவலானபோது, எதிர்வினையாகத் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்நேரத்தில் தமிழகத்தில் மாற்றுக் கல்வியை முன்னிறுத்தி ஏறக்குறைய முன்னூறு பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில் உள்ள இப்பள்ளி.

வில்லுப்பாட்டாக மாறும் பாடம்

எல்லாப் பாடங்களுமே கதை, பாடல், நாடகம், செய்து பார்த்தல், சென்று பார்த்தல் என்ற ஏதாவது ஒரு நேரடி அணுகுமுறையில் இருக்கும்படி திட்டமிடப்படுகிறது. “தமிழ்ப் பாடத்தை வில்லுப் பாட்டாக மாற்றும் மாணவ அனுபவமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெறும் அனுபவத்திலிருந்தே பாடத்தை அறியவைக்கும் உத்தியும் எங்கள் கற்பித்தலில் இயல்பாக மேற்கொள்ளப்படுகின்றன. எங்களுடைய பாடங்களுக்கு பழமொழி, புதிர்கள் போன்ற செயல்பாடுகளும் முக்கியமாக உள்ளன” என்கிறார் சாந்தி.

நட்ட நாடு காட்டுக்குள்ள

நாலு பசுமாடு நிக்கு அது என்ன?

பணம்பெத்த கருவாடு

பனைக்குள்ள இருக்கு

சாவட்டக் கருவாடு

மேவட்டம் போடுது

தைப் பனி தரைய துளைக்கும்

மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.

இது போன்ற சொலவடைகள், விடுகதைகளை பெரியவர்களிடமிருந்து மாணவர்கள் திரட்டுகிறார்கள்.

உவப்போடு உதவும் பெற்றோர்

மொழியை பயிற்றுவிக்க இவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எளிதானவை. சங்கரன்கோவிலில் புழங்கும் வாய்மொழிக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், விடுகதைகள் போன்றவற்றைப் பள்ளிக்குக் கொண்டுவருகிறார்கள். இவற்றை ஒரு குழந்தை தெரிந்துகொண்டு சொல்லும்போது, அக்குழந்தையை பாராட்டப்படுகிறது. பாடங்களுக்குத் தகவல் திரட்ட பெற்றோர்களும் ஆர்வத்தோடு உதவுகிறார்கள். தன் குழந்தைக்கு உதவ முடிவதால் படிக்காத பெற்றோர்களால்கூட, அதனால் கிடைக்கும் பலனை உணர முடிகிறது.

“நாம் தானியங்களின் சத்துகளைப் பற்றிப் படிக்கப் போகிறோம். யார் யார் என்ன எடுத்துவரப்போகிறீர்கள்? உங்கள் வீட்டில் இருக்கும் தானியங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். ஆளுக்கொரு தானியம் எடுத்துவாருங்கள் … “இப்படிச் சொல்லும்போது, வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் அது பற்றி விளக்கிய பிறகே குழந்தைகள் வாங்கிவருகின்றனர். வகுப்பறையில் முறைப்படுத்தப்பட்ட உரையாடல் வீட்டிலும் தொடரும்போது, அது பயனுடையதாவதைப் பார்க்கிறோம்.

எங்கள் குழந்தைகளின் ஆளுமையில் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. வையம்பட்டி முத்துசாமி, கரிசல் குயில் கிருஷ்ணசாமி போன்றவர்கள் எங்கள் பள்ளியில் நேரடியாகப் பயிற்சியளிப்பது இன்னொரு பலம். பாடப்புத்தகத்தில் வரும் அழ. வள்ளியப்பாவின் பாடல்களுக்கும், நாங்களே சேர்த்துக்கொண்ட பட்டுக்கோட்டையார் பாடல்களும், தாய்த் தமிழ்ப் பள்ளிகளால் முன்னெடுக்கப்பட்ட பாடல்களும் எங்கள் குழந்தைகளால் பாடப்படுகின்றன” என்கிறார் சங்கர்ராம்.

கத்தரிக்காய்க்கு கொடபுடிக்கக்

கத்துக் கொடுத்தது யாரு? - அந்த

அந்த கடலக் கொட்டைக்கு

முத்து சிப்பிபோல

மூடி வச்சது யாரு?

பூசனி தலையில் பூவை அழகா

முடிஞ்சி வச்சது யாரு- அட

வாசனை இல்லாக் காகிதப்பூவுக்கு

வர்ணம் அடிச்சது யாரு

யாரு யாரு யாரு காரணம்

தெரிஞ்சா கூறு கூறு கூறு

- இது போன்ற பாடல்கள் குழந்தைகளின் தேடல் சார்ந்ததாகவும் பகுத்தறிவை வளர்த்தெடுப்பததாகவும் அமைகிறது.

ஒத்தக்காலத் தூக்கி நொண்டியடி

ஒவ்வொரு புள்ளையா தொட்டுப்புடி

- இப்படி ஒவ்வொரு பாடலையும் குழந்தைகள் தாங்களே பாடும்போது அழகாக, ரசனையாக இருப்பது என்பது ஒருபுறம் இருக்க குழந்தைகளின் ஆளுமையில் அவை ஏற்படுத்தும் தாக்கம் அளவிடற்கரியது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்துப் பணியாற்றி ஆண்டு இறுதியில் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அதைக் காட்சிப்படுத்துவது இப்பள்ளியின் வழக்கம். இந்த ஆண்டு நாட்டுப்புற நடனம், கடந்த ஆண்டு கதை, அதற்குமுன் கைவினை என கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சங்கர் ராம்

‘எங்கள் பள்ளியில்தான் எங்கள் பிள்ளைகள் படித்தனர்’

“குழந்தைகள் விரும்பி வரும் இடமாக பள்ளி இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய பள்ளியின் நோக்கம். மாணவர்களை தண்டித்தல், அவமானப்படுத்துதல் இருக்கக் கூடாது. வீட்டுப் பாடம், மதிப்பெண், போட்டியிடுதல், ஒப்பிட்டுப்பார்த்தல் போன்றவை ஒருபோதும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் மேல் ஒருவர் பேசும் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தொடங்கப்பட்டது எங்கள் பள்ளி.

சமூக ஈடுபாடு, செயல்பாடாக மாற்றப்பட வேண்டும் என்ற உந்துதலில் நானும் என் மனைவி முத்துலட்சுமியும் இணைந்து இப்பள்ளியைத் தொடங்கினோம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்வழிப் பாடப்புத்தகத்தைப் பின்பற்றுகிறோம். அரசு எங்கள் பள்ளிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்திலிருந்து பாதியை வாங்குகிறோம். ஐந்தாம் வகுப்புவரை பயிற்றுவிக்கிறோம். எங்கள் குழந்தைகளும் இந்தப் பள்ளியில்தான் படித்தனர்” என்கிறார் சங்கர்ராம். இப்பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளுக்குச் செல்லும்போது கற்றலில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களிடம் மேலோங்கும் உற்சாகம், தாய்மொழியைப் போன்றே தாய்த்தமிழ்ப் பள்ளியும் நமக்கானது என்பதை உணர்த்துகிறது.

கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

தாய்த் தமிழ்ப் பள்ளி தொடர்புக்கு: 94435 55918

First published by The HinduStory Tags: alternative education, alternative learning

Comments

There are no comments yet on this Story.

Add New Comment

Fields marked as * are mandatory.
required (not published)
optional
Stories by Location
Google Map
Events