வெறும் பள்ளி அல்ல சமூகம்! (in Tamil)

By சாலைசெல்வம் on June 4, 2018 in Learning and Education

ஓவியம்: கோ.ராமமூர்த்தி

“எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் கடமை, தேர்தல் ஆணையத்தின் பணிகள் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் பகுதியை கையாளும்போது நீதிமன்றங்களின் கடமைக்கு முக்கியத்துவம் தருவதைவிட தேர்தல் ஆணையத்தின் பணிக்கு முக்கியத்துவம் தரலாம் என முடிவு எடுத்தோம். அதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்தல் ஆணைய உறுப்பினராக மாற்றினோம்.

பள்ளியைச் சமூகமாக மாற்றி தேர்தல் நடத்தினோம். குப்பை இல்லா பள்ளி வளாகத்தை இதை முன்னிட்டு உருவாக்கத் திட்டமிட்டோம்” என்கிறார் ‘ஐக்கியம்’ பள்ளியின் தலைமையாசிரியர் சங்கர் வெங்கடேசன்.

அதன்பின் வகுப்புத் தலைவர், பள்ளித் தலைவர் ஆகிய தேவைகளை முன்வைத்து தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று தேர்தல் பற்றி எடுத்துரைத்தனர். அவ்வகுப்புகளில் தலைமையின் பொறுப்பு அவசியம் பற்றி பேசினர். ரகசிய வாக்கெடுப்பு முறை பற்றி விளக்கினர்.

வாக்குச்சாவடி, வாக்குச்சீட்டுத் தயாரிப்பு, சின்னங்கள் தேர்வு, பிரச்சாரம் என ஒவ்வொன்றாக நடந்தது. தேர்தல் முறையாகவும் சிறப்பாகவும் நடந்தது. தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மற்ற வகுப்பு மாணவர்கள் தங்கள் கடமையை அழகாக நிறைவேற்றத் தொடங்கினர். இதன் விளைவாக, ‘ஐக்கியம்’பள்ளியின் வளாகம் பிளாஸ்டிக் இல்லா சமூகமாக தற்போது மாறியிருக்கிறது.

திட்டக் குழு

குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளுக்காகவும் குழந்தைகள் காப்பகமாகவும் புதுசேரிக்கு அருகில் உள்ள அரோவில்லில் இயங்கிவந்தது ‘ஐக்கியம்’. 2008-ல் இது ஐக்கியம் சி. பி.எஸ்.சி. பள்ளியாக முறைப்படுத்தப்பட்டது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை உள்ளது. “எல்.கே.ஜி.யில் மட்டும் 20 மாணவர்களைத் தேர்வுசெய்வோம். குழந்தையின் தேவையைப் பொரறுத்துத் தேர்வு செய்வோம். சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ள குழந்தைக்கு முன்னுரிமை அளிப்போம்.

இதே கிராமத்தில் வசிப்பவர்கள், அவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு தேர்வு செய்கிறோம். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் 20 குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறோம்” என்று விளக்குகிறார் ஐக்கியம் சங்கர் வெங்கடேசன்.

இப்பள்ளியின் பாடத்திட்டத்துக்குத் தேவையான புதிய கற்பித்தல் முறைகள், வல்லுநர்கள், ஆராய்ச்சி முறைகள், கற்றல் கருவிகள் போன்றவற்றை தீர்மானிக்க இப்பள்ளிக்கென்று பிரத்தியேகமான கல்வி உதவிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

சங்கர் வெங்கடேசன்

எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஒரு பிரிவு. ஒன்று முதல் நான்காம் வகுப்புவரை ஒரு பிரிவு. ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை மற்றொரு பிரிவு என மூன்று பிரிவுகள். மூன்று பிரிவு ஆசிரியர்களும் ஆரோவில் ஆசிரியர் மையத்தின் துணையுடன் தங்கள் பாடங்களைத் திட்டமிடுகிறார்கள்.

ஆண்டுத் திட்டத்தின்போது ஒவ்வொரு வகுப்பின் முழுப் பாடத்தையும் பாடத்திட்ட வரையறையோடு இணைத்து வாசிக்கிறார்கள். முடிந்த ஆண்டில் அப்பாடத்தில் நடந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல ஏழாம் வகுப்பு பாடத்தைத் திட்டமிட ஆறாம் வகுப்பில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் இணைத்துக்கொள்கிறார்கள். அப்படிச் செய்யும்போது மாணவர்களுக்கு அது பயன்படும்வகையில் அமைகிறது.

வன்முறை அற்ற சமூகப் பாடம்

இப்பள்ளியில் பின்பற்றப்படும் புதிய கற்பித்தல் முறை இவை:

கடந்த காலத்தில் பாட்டும் கதையும் நாடகமுமாக இருந்தது மொழிவகுப்பு. தற்பொழுது தமிழுக்கு வழக்கு மொழியும் ஆங்கிலத்துக்குப் பயன்பாட்டு மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது.

கற்றல்குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைளுக்கு கூடுதல் கவனம் செலுத்த தீபம் சிறப்புப் பள்ளியின் உதவி பெறப்படுகிறது. இதன் மூலமாக பேச்சுப் பயிற்சி, தசைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன . கற்றல் குறைபாடுள்ளவர்களுகென்று தனி ஆய்வகம் உள்ளது.

வன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான பாடத்திட்டம் இன்று அவசியமாக உள்ளது. ரீட்டா ஏர்பன் என்ற வல்லுநரும் கலையாசிரியர் மெடில்டாவும் இணைந்து அதைச் செயல்படுத்தி வருகின்றனர். ரீட்டா குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துநராகச் செயல்படுகிறார்.

‘சுதர்மா கமிட்டி’ என்ற ஒரு குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் சிறு சிறு பிரச்சினைகளைக் கடக்க உதவுகின்றனர். ஒரு வேளை ஒரு மாணவர் வீட்டுப் பாடம் முடிக்கவில்லையென்றால், அவர்களிடம் அனுப்பப்படுவர். அங்கு உட்கார்ந்து முடித்துவிட்டு வகுப்புக்குத் திரும்புவர்.

‘வாளியை நிரப்புவது எப்படி?- என்ற கதைப் புத்தக வரிசை நன்னடத்தைக்கான பாடமாகப் பின்பற்றப்படுகிறது.

இப்படி, பிரச்சினைகளை மாணவ நிலையிலிருந்து பார்க்க முயல்கிறது இப்பள்ளி. பாடத்திட்டத்தைக் கடந்தும் மாணவர்களுடன் செயல்பட எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பே ‘ஐக்கியம்’ பள்ளி.

கட்டுரையாளர், கல்விச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
ஐக்கியம் பள்ளி: www.aikiyamschool.org 8940193339

First published by The HinduStory Tags: alternative education, alternative learning

Comments

There are no comments yet on this Story.

Add New Comment

Fields marked as * are mandatory.
required (not published)
optional
Stories by Location
Google Map
Events