மேற்கு இமயப் பகுதியில் பெருந்தொற்றுக்கு எதிரான நெகிழ்வுறுதி (in Tamil)

PostedonMar. 18, 2021in Perspectives

மூன்றாம் தொகுப்பு
சாதாரண மக்களின் அசாதாரணமான பணிகள்: பெருந்தொற்றுக்கும் பொதுமுடக்கத்துக்கும் அப்பால்

அறிமுகம் – ஏன் மேற்கு இமயப்பகுதிமீது கவனம் செலுத்த வேண்டும்?

இந்திய இமயப் பகுதி 12 மாநிலங்களை உள்ளடிக்கியிருப்பினும், மேற்கு இமயப் பகுதி இமாச்சலப் பிரதேசம், உத்தர்கண்ட், லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைக் கொண்டதாக உள்ளது.  இந்திய இமயப்பகுதி 5.1 கோடி மக்களையும் பலவகைப்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் கொண்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிக்கு நீரை வழங்குகிறது; உயர்ந்த மலைச் சிகரங்களையும், மிடுக்கான நிலத்தோறங்களையும், வளமான பண்பாட்டையும் மரபையும் தன்னகத்தே கொண்டது.

பருவச்சூழல் மாற்றத்தின் அறிகுறிகளை மலைகளே முதலில் வெளிப்படுத்துகின்றன. பனிப்பாளங்கள் பின்னடைவது ஆறுகளின் திசைமாற்றத்தைக் குறிக்கின்றன; அதன் விளைவாக பன்மயச்சூழல், வாழ்வாதாரம், மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றில் மாற்றங்கள் விளைகின்றன. இமய மாநிலங்கள் பருவச்சூழல் மாற்றம், நிலச்சீர்கேடு, அதிகப்படியான சுரண்டல், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றால் உலகிலேயே மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் ஒன்றாக உள்ளன.

மலைகள் போக்குவரத்தையும் கடினமாக்குகின்றன. தகவல் பரிமாற்றம் எப்போதும் எளிமையானதன்று; ஆனால் மக்கள் சரியான தகவல்களைப் பெறுவதை மலைகள் மேலும் கடினமாக்குகின்றன. மோசமான இணைய இணைப்பு, இலக்கமுறை இடைவெளி, எட்டாத் தொலைவு ஆகியவை இடர்களைப் பெரிதாக்குகின்றன.  பொருளாதார வளர்ச்சியுறா நாடுகளின் மலைப்பகுதிகளில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவர் வறுமையையும், உணவுத் தட்டுப்பாட்டினையும், தனிமையையும் சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியர்கள் நைனித்தால், முசோரி, சிம்லா போன்ற மலைத்தலங்களையும், கோடை விடுதிகளையும்  இப்பகுதியில் அமைத்தது முதலே சுற்றுலாத்துறை இங்கு முகிழ்த்தது; இவ்விடங்கள் பெரும் சுற்றுலாத் தலங்களாக இன்று உருவெடுத்துள்ளன. பத்ரிநாத், சார் தாம், கேதாரிநாத் போன்ற புண்ணியத்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. சுற்றுலா வளர்ச்சிக்குச் செறிவான வாய்ப்புகள் இருப்பதால், தற்சார்பு, தாங்கும் கொள்திறன், சூழல்நலச் சுற்றுலா ஆகியவை முதன்மையுறுகின்றன.  கழிவு மேலாண்மை, சுற்றுலாப் பயணிகள் வரவால் அதிகரிக்கும் நெகிழிப் பயன்பாடு ஆகியவை குறித்த மிகுந்த கவலையும் நிலவுகிறது. சமூகக்குழு சார்ந்த சுற்றுலா இவற்றுக்கு மாற்றான, வளங்குன்றாத் தன்மைகொண்ட சுற்றுலா முறையாகக் கருதப்படுகிறது; இதன்மூலமும் இல்லவிடுதிகள் மூலமும் உள்ளூர் சமூகக்குழுக்களுக்கு தொழில்முனைப்பு வருமானம் கிட்டும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, இமயப் பகுதியும் வேளாண்மை சார்ந்தே உள்ளது. ஆனால் வேளாண்மை வணிகமயமானதாலும், பணப்பயிர்ப் பெருந்தோட்டங்கள் பெருகுவதாலும் உள்ளூர்ச் சமூகக்குழுக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து அந்நியப்பட்டிருக்கின்றன. வரலாற்றுரீதியாக முல்லைத்திணை வாழ்வும் மேய்ச்சல் விலங்குகளை வெவ்வேறு இடங்களுக்கு மேய்க்க அழைத்துச் செல்வதும் இப்பகுதியில் இன்றியமையாத பொருளாதார நடவடிக்கைகளாக இருந்தன. சொத்துரிமையும் வனச்சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், வான் குஜ்ஜர்கள் போன்ற பல மேய்ச்சல் சமூகங்கள் வாக்குரிமையின்றி, வீடும் மின்சாரமும் அற்றுப்போனதை உணர்ந்தனர்! சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களாகக் கருதப்படுவதால், காடுசார் சமூகக்குழுக்கள் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருகின்றனர்;  நடுவண் அரசும் மாநில அரசுகளும் அவர்களது இடப்பெயர்வை மட்டுப்படுத்தி, எங்கேனும் குடியமர்த்துவதிலேயே தொடர்ந்து குறியாக இருந்திருக்கின்றன.

Tamil translation of the entire report

Read the original report in English

Story Tags: , , , ,

Leave a Reply

Loading...