குழந்தைதான் ஆசிரியர்! (in Tamil)

By சாலை செல்வம்onJun. 04, 2018in Learning and Education

ஓவியம்: வே.ராமமூர்த்தி

விவசாயியின் குழந்தை, கைவினைக் கலைஞரின் குழந்தை, வெளிநாட்டவரின் குழந்தை, பெரிய அதிகாரியின் குழந்தை, பணமே கட்ட முடியாத தொழிலாளியின் குழந்தை, கற்பதற்குக் கஷ்டப்படும் குழந்தை இப்படி எல்லாக் குழந்தைகளும் இணைந்து கற்கும் இடமாக மருதம் பள்ளி உள்ளது. வேறுபட்ட சமூகப் பின்னணியில் இருந்துவரும் குழந்தைகளை ஒன்றிணைக்கும் இடமாக இது திகழ்கிறது. தமிழ்க் குழந்தையிடமிருந்து வெளிநாட்டுக் குழந்தை தமிழ் மொழியைக் கற்கிறது.

தமிழ்க் குழந்தை ஆங்கிலம் கற்கிறது. பந்து வேகமாக எறியும் குழந்தையிடமிருந்து, எறியவே பயப்படும் குழந்தை கற்றுக்கொள்கிறது. ஒருவரை மற்றொருவர் மதிப்பதற்கு அவர்களுடைய பின்புலம் பொருட்டல்ல என்பதை இங்கே செயல்முறைப்படுத்தி வருகிறார்கள்.

மருதம் ஃபார்ம் பள்ளி

“நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் பாடத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வி ஒரு மாணவருக்கு எழுந்தாலே, அங்கே கல்விக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி உள்ளது என்று அர்த்தம். தாங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு பாடத்திலும் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய முயல்கிறது ‘மருதம் ஃபார்ம் பள்ளி’.

எப்படிக் கற்கலாம்?

காடுகளைப் பாதுகாப்பது, சூழலியல் கல்வி, இயற்கை வேளாண்மை ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு திருவண்ணாமலையில் ‘தி ஃபாரெஸ்ட் வே’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பு 2009-ல் ‘திருவண்ணாமலை கற்றல் மையம்’ என்ற பெயரில் 20 மாணவர்களுடன் ஒரு பள்ளியைத் தொடங்கியது. 2011-ல் ‘மருதம் ஃபார்ம் பள்ளி’ என்று பெயரில் அந்தப் பள்ளி 8 ஏக்கர் நிலப்பரப்பில் எளிமையான, அழகானதொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. கல்வி, இயற்கை ஆர்வலர்களின் பங்களிப்பால் இப்பள்ளியின் வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காற்றினிலே வரும் கீதம்…

“கருத்தாக்கங்களாக மட்டுமே பாடங்களைப் போதிக்கும் முறையைக் கடந்து கதை சொல்லுதல், உரையாடல் போன்ற சுவாரசியமான வழிமுறைகளைக் கையாண்டுவருகிறோம். அத்துடன் ஆர்வமுள்ள விஷயங்களில் குழந்தைகள் சுதந்திரமாகவும் ஆழமாகவும் கற்க ஏற்பாடு செய்கிறோம். உதாரணத்துக்கு, பறவையைப் பார்க்கவும் அறியவும் ஆசைப்படும் குழந்தைக்கு அதில் முழுமையாக ஈடுபடும் வழிவகைகளைச் செய்து தருகிறோம்.

அதேபோல, சிற்பம் வடிக்க விரும்பும் குழந்தையின் ஆர்வத்தைக் கண்டுபிடிப்பதையும் ஊக்குவிப்பதையும் கடமையாகக் கருதுகிறோம். இன்னும் சொல்வதென்றால் குழந்தை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க முயல்கிறோம்” என்கிறார் இப்பள்ளியின் ஆசிரியை பூர்ணிமா.

நிலக்கடலையைப் பற்றி நிலத்திலேயே படிப்போம்!

கற்கும் ஆசிரியர்

‘மருதம்’ பள்ளியின் மாணவர்கள் பாடங்களுடன் கைவினை, உழவு, விளையாட்டு என எப்போதுமே துறுதுறுப்பாகப் பயின்றுகொண்டே இருக்கிறார்கள். முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இங்கு ஆசான்கள் அல்ல.

பூர்ணிமா

பனை ஓலையைக் கொண்டு குருவி செய்யவும் கூடை பின்னவும், களி மண்ணைக்கொண்டு பானை வனையவும் கைத்தொழில் வல்லமை நிறைந்த எளிய மக்களே ஆசிரியர்களாகிக் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் மீது அக்கறையும் அன்பும் அவர்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள் ஒரு குழுவாக இணைந்து கற்பித்தலில் இங்கு ஈடுபடுகிறார்கள்.

மாணவர்களுடைய பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்வதையும் அவற்றுக்கு மதிப்பளிப்பதையும் தங்களுடைய கடமைகளில் ஒன்றாக இப்பள்ளி ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதனால் மாணவர்கள் குறித்து தொடர்ந்து உரையாடுகிறார்கள்.

தான் கற்றதைக் கற்பிப்பவராக அல்லாமல் மாணவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்பவராக இங்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு தளங்களில் கற்றலுக்கான சாத்தியங்களைத் தேடிப் பயணிக்கவும் தூண்டப்படுகிறார்கள்.

“நாங்கள் முன்வைக்கும் கல்வி மதிப்பெண்ணை மையப்படுத்தியது அல்ல. அதனால், கல்வியைக் குழந்தையின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த முடிகிறது. பள்ளி பற்றிய எல்லா முடிவுகளும் ஆசிரியர் குழுவில் விவாதிக்கப்படும். ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் கற்றுக்கொடுக்கச் சுதந்திரம் உண்டு. அதேபோல, தங்களுக்கான கற்றல் சூழலைக் குழந்தைகளே இங்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்க மரத்தடி உகந்தது என்றால் அங்கே செல்லலாம், இன்னொரு பாடத்துக்கு ஏரிக்கரைக்கு ஆசிரியருடன் செல்லவும் வழி உண்டு” என்கிறார் இப்பள்ளி ஆசிரியரும் நிர்வாகப் பொறுப்பாளருமான அருண்.

மருதம் வகுப்பறை

மேடு, பள்ளம் எதற்கு?

“அனைவரையும் சமமாக நடத்துவது என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதல்ல. ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு மாதிரியான கற்றலில் ஈடுபடுகிறது. அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுவதே கல்வி சமத்துவம்.

அருண்

விவசாயி வீட்டிலிருந்து வரும் ஒரு குழந்தைக்கு விதைகளின் பெயரும் விதைக்கும் முறைகளும் பயிர் பாதுகாப்பும் தெரியும்.

அக்குழந்தை அதை மற்ற குழந்தைகளுக்குச் சுலபமாகப் புரியவைக்க முடியும். இங்கே குழந்தைகள் குழுவாகக் கற்றலில் ஈடுபடுகின்றனர். தேவைப்படும்போது தனிப்பட்ட கவனம் செலுத்தி ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையிலும் செயல்படுகிறோம்” என்கிறார் அருண்.

எளிமையையும் இயற்கை எழிலையும் ஆராதிக்கும் அதே நேரம் மாணவர்-ஆசிரியர் உறவில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவர முயலும் இப்பள்ளி ஒரு புதிய தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர், கல்வி செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: [email protected]

First published by The Hindu

Story Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
%d bloggers like this: