‘பொதுவெளிகள் எங்கே?’ (in Tamil)

By பிரபா ஸ்ரீதேவன் (தமிழில் : த.கண்ணன்) on Sep. 19, 2017 in Perspectives

Translated specially for Vikalp Sangam

Read the original in English – Where are the Commons?

புலப்படும் சொத்துகள் மற்றும் புலப்படாச் சொத்துகளின் தனியுடைமைக்கும், பொதுவெளிகளை எல்லாரும் அனுபவிப்பதற்கும் இடையே நிலவும் இறுக்கம் புதியதொரு நிகழ்வன்று. நிலம் உருவானபோது வேலிகள் இருந்திருக்கமுடியாது. வேலிகள் பின்னர் தான் வந்தன; வில்லங்கங்கள், உரிமைப் பத்திரங்கள், பட்டாக்கள் எல்லாம் அதற்கும் பின்னர் தான் வந்தன. குதம்பைச் சித்தர் மிக எளிமையாகத் தோற்றமளிக்கக்கூடிய, ஆனால், தத்துவ, மீபொருண்மை உட்பொருள்கள் பொதிந்த பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்பாடல்களில் ஒன்று இவ்வாறு உள்ளது: “வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போற்குப் பட்டயம் ஏதுக்கடி?” அவர் வேறொரு தளத்தில் இப்பாடலைப் பாடினார் என்பது உண்மைதான்நிலம் போன்ற புலப்படும் சொத்தைப் பற்றியல்ல.

மனிதன் வேலிகளுக்கும் சொத்துச் சான்றிதழ்களுக்குமான தேவையை உணர்ந்தபிறகும்கூட, சில நிலங்கள் எல்லாருடைய பொதுப் பயன்பாட்டுக்கும், எல்லாருக்குமானதாகவும் வைத்திருக்கவேண்டும் என்பதை ஆமோதித்தான்.மத்திய கால இங்கிலாந்தில், அவை எல்லாரும் அனுபவிக்கக்கூடிய பொதுவெளிகளாக அறியப்பட்டன. இந்நிலங்களும், தரிசு நிலங்களும் தமிழில் புறம்போக்கு நிலங்களாக வகுக்கப்பட்டன. “புறம்போக்கு எனக்கு இல்லை, புறம்போக்கு உனக்கு இல்லை, புறம்போக்கு ஊருக்கு, புறம்போக்கு பூமிக்குஎன்கிற கலகப்பாடல் இப்பொதுவெளிகளைப் பற்றியும், பொதுவெளிகள் எப்படி சுருங்கிவருகின்றன என்பதைப் பற்றியும் பாடுகிறது. மந்தைவெளி, மாட்டுத்தாவணி போன்ற சொற்கள், ஒரு காலத்தில் ஆடுமாடுகளுக்காக மேய்ச்சல் நிலங்கள் அங்கு இருந்ததைக் குறிக்கின்றன; இன்றோ அவற்றின் சோகமான எதிரொலியாக உள்ளன. இப்போது அந்த இடங்கள் கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்துள்ளன. ஆடுமாடுகளின் எண்ணங்களை நாம் அறிந்துகொள்ளமுடியுமானால், அவை தங்களுக்குப் புல்லைக் கொடுத்தால் போதுமே, பாதுகாக்கிறேன் என்று சொல்லி இத்தனை வன்மமும் வன்முறையும் எதற்காக என்று யோசிப்பதை நாம் அறிந்துகொள்வோம்.

குதம்பைச் சித்தரின் கேள்விக்குத் திரும்புவோம்: பொதுவெளிகளுக்கு எப்படி பட்டா வழங்கப்படுகிறது? ஆனால், பொதுவெளிகளில் இன்று தனியார் ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல, அசைக்கமுடியாத ஆற்றல்படைத்த அரசாங்கங்களாலும் வேலிகள் அமைக்கப்படுகின்றன. புறம்போக்குப் பாடல் உண்மையில் எண்ணூர் சிறுகுடா பொதுவெளியாக வைக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி, அரசு ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுப்பப்படும் எதிர்ப்புக்குரல்தான். எண்ணூர் முகத்துவாரப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரைவரைபடத்தின்படி, 8000 ஏக்கர் நீர்ப்பரப்புப்பகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் அனுமதிப்படக்கூடாது. ஆனால், ஏற்கனவே அங்கு அனல்மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் நிறுவனங்கள், மற்றும் பல கட்டடங்கள் என்று 8000 ஏக்கரில் 1090 ஏக்கர் பகுதியில் உள்ளன; இவை சதுப்பு நில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2010 [Wetlands(Conservation and Management) Rules, 2010] படி பாதுகாக்கப்படவேண்டியவை. ரோமானியச் சிந்தனையாளர் ஜூவெனெல்(Juvenel) போல நாம் காவலனை யார் கண்காணிப்பது?” என்று புலம்புகிறோம். இந்த விதிகளுக்கான முகவுரை, சதுப்பு நிலங்கள் எவ்வாறு நீரியல் சுழற்சிக்கு அத்தியாவசியமான பகுதியாக இருக்கின்றன, அவை எவ்வாறு நிலநிரப்பலாலும், அதிகப்படியான சுரண்டலாலும் அச்சுறுத்தப்படுகின்றன, ராம்சார் ஒப்பந்தத்தின்படி (1971ல் கையெழுத்திடப்பட்ட சதுப்புநிலங்கள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்)அவற்றைப் பேணிப்பராமரிக்க வேண்டியது எவ்வாறு அவசியமாகிறது போன்றவற்றைக் குறிப்பிட்டுத்தான் தொடங்குகிறது. ஆமாமாம்.

சென்னையில் உள்ள கடற்கரைகள் பொதுமக்களுக்காகத் திறந்தேயிருக்கின்றன என்று நான் நினைக்கிறோம். ஆனால், சென்ற ஆண்டு, ஏழைக் குழந்தைகள் கால்ப்பந்தாட்டக் கோப்பை ஒன்றை அங்கு நடத்த விரும்பியபோது, சென்னை மாநகராட்சி அதற்கான அனுமதியை மறுத்ததாக நாம் படித்தோம். இதுவொன்றும் நிரந்தரக் கட்டடமோ, ஆக்கிரமிப்போ அல்ல; பயிற்சியெடுத்துவந்த குழந்தைகள் சிலமணிநேரம் ஆடி மகிழ்வதுதான். இதற்கு அளிக்கப்பட்ட காரணம், ஆலிவ் ரிட்லி ஆமைகள் இந்த விளையாட்டால் பாதிக்கப்படும் என்பதுதான். இப்போட்டி செப்டெம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது. வல்லுனர்கள் பலரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் செப்டெம்பர் மாதத்தில், பல்லாயிரம் மைல்கள் தள்ளியே இருக்கும்; எனவே இக்காரணம் வெறும் சப்பைக்கட்டுதான் என்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 39(f), குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அரசுக்கு வழிகாட்டுகிறது. ஆனால், அழுக்கும் அசுத்தமும் நிரம்பிய குடிசைகளில் வசிக்கும் அக்குழந்தைகள், பொதுவெளியில் விளையாடி மகிழ ஆர்வம்கொள்ளும்போது, அவர்களது முயற்சி விரக்தியில் முடிகிறது. பிறகு நாம் குழந்தைக் குற்றவாளிகளைப் பற்றிப் படிக்கிறோம்பொதுவெளிகளில் விளையாடும் சுதந்திரமற்ற குழந்தைப்பருவம் இளம் மனங்களைத் திரிக்கக்கூடும் என்கிற நிதர்சனத்தைப் பாராமுகத்தோடு. பட்டா எதுவுமற்ற நம் குழந்தைகளுக்கான பொதுவெளிகள் எங்கே? அகிலம் முழுவதும் பயன்படுத்தக்கிடக்கும் புறம்போக்குப் பகுதிகள் எங்கே?

படைப்பியக்கப் பொதுவெளி (Creative Commons)

அறிவுசார் சொத்துரிமை உலகிலும், சுருங்கிவரும் பொதுவெளிகள் பொது நலத்திற்குக் கேடாகவே உள்ளன. படைப்பியக்கப் பொதுவெளி என்கிற கருத்தாக்கம் அறிவையும் படைப்பூக்கத்தையும் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கிறது; சமத்துவம் நிறைந்த, அணுக எளிதான, புதியன புகுத்தும் உலகினைச் சட்டங்களின் சட்டகத்திற்குள் படைக்கத் துணைசெய்கிறது. காப்புரிமைக்காக படைப்பியக்கப் பொதும உரிமத்தின் பயன்பாடு திறந்தநோக்கு, பகிர்தல் ஆகியவற்றின் தத்தவத்தளத்தைச் சார்ந்துள்ளது; பணமாக்கும் யுக்திகளையும், குறுக்கும் வேலிகளையும் சார்ந்திருக்கவில்லை. இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பெட்டகமாக உள்ள SpicyIP என்ற நிறுவனம், தனது வலைதளத்தில் கூறியிருப்பது போல, இந்த முயற்சியின் முழுமுதல் நோக்கம், ‘ஒவ்வொரு குழந்தையின் கரங்களிலும் ஒரு புத்தகத்தை வைப்பதே ஆகும்.’ அதே போல, மெரீனாவிலும் பெசன்ட் நகரிலும் நடக்கவிருந்த கால்ப்பந்தாட்டப் போட்டியின் நோக்கம் குழந்தைகளின் கரங்களில் மகிழ்ச்சிப் பந்தினை வைப்பதே ஆகும்

அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம், பொதுச் சுகாதாரம் குறித்து 2006ல் வெளிவந்த உலக சுகாதார நிறுவனத்தின் தகவலறிக்கை கண்டறிந்தது இது: காப்புரிமையைக் கடுமையாக நிலைநாட்டுவது புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில்லைகுறிப்பாக தொழில்நுட்ப நுண்திறமை சரியான அளவினை அடைந்திராதவளரும் நாடுகளில். இன்னொரு புறம், நுகர்வோர் அணுகுவதற்குத் தடையாக இருப்பதாலும், அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாக இருப்பதாலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. விலைகளின் இறுக்கப்பிடி வேலிகள் இடுவதற்கும், கால்ப்பந்தாட்டத் தடைக்கும் இணையாக உள்ளதால், தொடர் பாதிப்பை உருவாக்குகிறது.

இனி, சுருங்கும் பொதுவெளிகள் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் இன்னொரு வெளிக்கு வருகிறேன்: நீதி கிட்டுதல். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 327 கூறுகிறது, “குற்ற விசாரணை செய்வதற்காக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் ஒரு திறந்த நீதிமன்றமாகவே கருதப்படும்; பொதுவாக, வசதியாக இடமளிக்கக்கூடிய வரையில் பொதுமக்கள் அணுகுவதற்கு அனுமதியளிக்கப்படும்.” நீதிமன்றங்கள் எல்லாரும் அணுகக்கூடியனவாகவும் எல்லாருக்கும் பொதுவானவையாகவும் இருக்க வேண்டியவை. இவையுமே இப்போது எல்லாரும் அணுகுவதற்கு ஏதுவாக இல்லாதசொகுசாகவே ஆகின்றன; இது ஜனநாயகச் சித்தாந்தத்திற்கு எதிரானதாக உள்ளது.

ஓர் ஆண்ஞானியிடமிருந்து தொடங்கினேன்; என் கதையை ஒரு பெண்மேதையோடு முடிக்கிறேன். இப்பெண் தனது பதின்ம வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பந்திப்பூர் அருகே ஒரு சிறு பழங்குடி கிராமத்தில் வாழ்கிறாள். ஸ்பைசி ஐபி நிறுவனர் பேராசிரியர் ஷாம்னாட் பஷீர் சொன்ன கதை இது. அவள் ஒரு புதிய நடன அசைவினை உருவாக்கியிருக்கிறாள். பேராசிரியர் பஷீருக்கும் அவளுக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதி இது.

புத்தம் புதிதாக ஒன்றைப் படைத்திருக்கிறாய் என்பதை நீ அறிவாயா?”

ஆம்.”

இந்த அசைவினை உருவாக்கிய பெண் என்று நீ அறியப்பட விரும்புகிறாயா?”

பார்க்கலாம்.” (நடக்குமா, நடக்காதா என்பது குறித்து அவளுக்கு அக்கறை இல்லை.)

உனது வகுப்புத்தோழி இதைத் தனது கண்டுபிடிப்பு என்று நிறுவினால், நீ வருந்துவாயா?”

இல்லை.”

அவளோடு சண்டைப் போடுவாயா?”

எதற்காகச் சண்டைப் போடவேண்டும்?”

ஒரு புதிய அசைவினை அவள் கண்டுபிடித்திருந்தால், அதை உனது என்று நீ நிறுவுவாயா?”

எதற்காக நான் அப்படிச் செய்யவேண்டும்?”

அவளுக்கு ஒரு வலுவான அற உணர்வும், சில வெளிகள் எல்லாருக்கும் பொதுவானவையாக வேலிகளின்றி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிற அறிவும் இருந்திருக்கிறதுவெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போற்குப் பட்டயம் ஏதுக்கடி. நாம்  இம் மெய்ம்மையை இழந்துகொண்டிருக்கிறோம்.

 

(பிரபா ஸ்ரீதேவன் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி)

                                                                   Story Tags: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Story Categories
Explore Stories
Stories by Location
Events
Recent Posts