உயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil)

By சாலை செல்வம்onMay. 08, 2018in Learning and Education

“குழந்தைகளின் புரிதல் அழகானது, அற்புதமானதும்கூட. அவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்கள் பேசுவதில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பாடப் புத்தகம் சொல்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருமுறை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் பேசியபோது, ‘மண்ணில் ஏன் விதை முளைக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘மண்ணுக்கு உயிர் இருக்கிறது’ என்றனர். மகத்தான தத்துவார்த்தச் சிந்தனைபோல என் மனதில் அவர்களுடைய புரிதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர்தான் ‘புவிதம் பள்ளி’யின் கற்பித்தல் முறையை வடிவமைக்கத் தொடங்கினேன்” என்கிறார் அப்பள்ளியின் நிறுவனர் மீனாட்சி.

இந்தப் பள்ளிக்கான விதையை, வானம் பார்த்த பூமியைப் பசுமைக் காடாக மாற்றியபடி சேர்த்தே அவர் ஊன்றினார். எட்டாண்டு உழைப்புக்குப் பிறகு 2000-ம் ஆண்டில் ‘புவிதம்’ பள்ளியைத் தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளிக்கு அருகில் நாகர்கூடலில் உள்ளது ‘புவிதம்’. இப்பள்ளியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கிராமக் குழந்தைகள் படித்திருக்கிறார்கள்.

மீனாட்சி

இங்கே கற்ற கல்வியின் வழியாக பொறியாளர், மரபு மருத்துவர், ஆசிரியர், கைத்தொழில் கலைஞர் என அரசு, தனியார் துறைகளில் பணியும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் உத்வேகத்துடன் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

“கிராமக் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அதற்கான கல்வி இவர்களுக்குத் தேவை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவர்கள். ஆனால், அவர்கள் செய்துவந்தது பாசனம் சார்ந்த வேளாண்மை அல்ல. வறண்ட பூமியில் வாழும் இவர்களுக்கு தண்ணீர் சேகரிப்பு, தண்ணீர்ப் பாதுகாப்பு, வறண்ட நிலத் தாவரங்களைப் பயிரிடும் முறை, மரத்தை நட்டுப் பாதுகாத்து வளர்க்கும் திட்டம் ஆகியவற்றைக் கற்பிப்பதே அவசியம் என்று தோன்றியது. இந்தப் பின்னணியுடன் பல நாடுகளின் புத்தகங்களை வாங்கிப் பல மாற்றுக் கல்வி முயற்சிகளை அறிந்த பிறகே எங்கள் கல்வித்திட்டத்தைத் திட்டமிட்டோம்” என்கிறார் மீனாட்சி.

புதுமை பாடத்திட்டம்

அவர் வாங்கிப் படித்த வெளிநாட்டுப் புத்தகங்களுக்கும் நமது பாடப் புத்தகங்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதைவிடவும் நம் பாடத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலேயே பெரும் இடைவெளி நிலவுவதைக் கண்கூடாகப் புரிந்துகொண்டார். இந்தப் பின்னணியில் புவிதம் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள்:

கலை வடிவங்கள்: கதைகள், பாடல்கள், நாடகங்கள் வழியாகக் கற்றல்.

மாற்று அறிவியல்: ‘கழிவுப்பொருட்களில் இருந்து அறிவியல்’ என்ற அரவிந்த் குப்தாவின் முறையைப் பயன்படுத்துவது.

சமூகத்தை உள்ளடக்கிய முறை: வீட்டிலிருந்து விதையைக் கொண்டுவந்து பள்ளியில் விதைத்து, முளைக்கவைத்து வீட்டுக்குச் செடியைக் கொண்டு சென்று வளர்ப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது.

பயணம்: வெறும் சுற்றுலா பயணமாக அல்லாமல், ஒரு புதிய இடத்தில் சில வாரங்கள் தங்கி அங்கு வாழக் கற்றுக்கொள்வது.

தனித்தன்மையை வளர்த்தெடுப்பது: விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும், பாசாங்கின்றித் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவும் அனுமதித்தல்.

இயல்பான முகிழ்வு

“மண்டையை உடைத்துப் பாடத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியாமல் போன காலத்தைக் கடந்துவிட்டோம். திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு திறந்த மனதோடு மாணவர்களுடன் உரையாடி, சேர்ந்து செயலில் ஈடுபட்டு, சேர்ந்து கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இயங்கும் நிலைக்கு மாறியுள்ளோம்” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் மாதவன்.

மாதவன்
மாதவன்

தங்களுடைய பள்ளியின் முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி ஒன்றையும் அவர் விவரித்தார்:

“குழந்தைகள் வீட்டிலிருந்து விதை எடுத்துக்கொண்டுவந்து பயிரிடும் முயற்சி அது. ஆசிரியரும் மாணவர்களும் முதலில் நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் செப்பனிட்டோம். ஒவ்வொருவரும் கடுகு, மொச்சை என்று விதவிதமான விதைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை மூன்று குழுக்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம்.

தண்ணீர் ஊற்றிய பிறகு அது பின்னாடியே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்தனர். உற்று உற்றுப் பார்த்தனர். முளை விடும்போது சிலவற்றில் இரண்டு இலைகள் தெரிகின்றன, சிலவற்றில் ஒன்று மட்டும் தெரிகிறதே என்ற கேள்வியோடு வந்தனர். அப்போது எங்களுக்கு இடையில் மலர்ந்த உரையாடலில் தாவரவியல் இயல்பாக முகிழ்ந்தது” என்கிறார் மாதவன்.

புத்தகத்தைத் தாண்டி யோசிக்க நாம் மறந்துவிட்டோம். ஆனால், துளிர் பருவத்தினர் யோசிக்க முடிவது மட்டுமில்லாமல் ஒவ்வொன்றையும் வாழ்க்கையோடு இணைத்தும் புரிந்துகொள்கின்றனர்.

பொறுப்பு கூடிவரும்

எது கடினமான விஷயம் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி மாணவர்களுடன் உட்கார்ந்து உரையாடும்போது எளிமையாகப் புரிதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் தனக்குக் கிடைத்த அனுபவப் பாடம் என்கிறார் மீனாட்சி. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுடன் அவர் தொடர்ந்து செய்துவரும் முயற்சிகளை விவரித்தார்.

“ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இடையில் ‘ஆண் பலசாலியா பெண் பலசாலியா’ என்ற போட்டி உரையாடல் அடிக்கடி நடப்பதைக் கவனித்தபோது, ஒரு திட்டம் போட்டோம். அந்த வகுப்பு மாணவ, மாணவிகளைப் பிரித்து இரு தரப்பினருக்கும் விதை கொடுத்து மூன்று மாத காலம் இருவரும் வேலை செய்யுங்கள், முடிவு என்னவென்று பார்ப்போம் என்றோம்.

அந்த முறை மாணவிகள் விதைத்தவைதான் சிறப்பாக வளர்ந்திருந்தன. மீண்டும் அவர்களுடன் உட்கார்ந்து போட்டி போடுவதா புரிந்துகொண்டு இணைந்து செயல்படுவதா என்ற உரையாடலையும் செயல்பாட்டையும் முன்வைத்தோம். இதற்கான பலன் வேறொரு சூழலில் எங்களுக்குக் கிடைத்தது.

அதே மாணவர்களை ஒரு பெரிய பள்ளிக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றோம். அங்கே ஆண், பெண் குழந்தைகள் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். எங்கள் குழந்தைகள் இயல்பாகச் சேர்ந்து அமர்ந்துகொண்டார்கள். இதைப் பார்த்து அப்பள்ளி ஆசிரியர்கள், ‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டனர். நாம் தடையாக இல்லாதபோது மாணவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்துகொள்வார்கள் என்று பதிலளித்தேன்” என்கிறார் மீனாட்சி.

இந்த பூமியின் மீதும், எதிர்கால மனிதத்தின் மீதும், எல்லா உயிர்கள் மீதும் அக்கறைகொண்டவர்கள் என்ன செய்வார்களோ, அதை முழு நேரமும் செய்துவரும் பள்ளிகளில் ஒன்று ‘புவிதம்’.


First published by The Hindu

Watch a video – Puvidham, A School outside the Classroom

Puvidham – Education for Sustainable Living and Rural Development

Story Tags: , ,

Leave a Reply

Loading...