நாம் அனைவரும் அதிமனிதர்கள் அல்லர் (in Tamil)

By த.கண்ணன்onSep. 26, 2016in Perspectives
On target: “When a video this striking comes along, it comes with a lot of potential for giving disability the attention it deserves.” A video grab from Channel 4’s Rio Paralympics tralier.
On target: “When a video this striking comes along, it comes with a lot of potential for giving disability the attention it deserves.” A video grab from Channel 4’s Rio Paralympics tralier.— Photo: YouTube

ரியோ 2016 பாராலிம்பிக்ஸ் (உடல்திறன்/மூளைவளர்ச்சியில் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக்ஸ்) போட்டிகளுக்கான முன்னோட்டப் படம் மனதைப்பிசைவதாக அமைந்தது; ஆனால் ஊனத்தை எழுச்சியூட்டும் கிளர்ச்சியாக்கமாக (inspiration porn) அளித்தது.

என்னுடைய சமூக வட்டம் எழுத்தாளர்கள், நிழற்படக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியது. நான் ஒருத்தி மட்டுமே வேறானவள். நான் ஒருத்திதான் ஊனமுற்றவர்களுக்காவும் அவர்களது வளர்ச்சிக்காகவும் பணியாற்றும் துறையைச் சேர்ந்தவள். நான் என்ன செய்கிறேன் என்பது எனது சமூக வட்டத்தில் எவருக்கும் புரிந்திருக்காது என்பதை ஓரளவு உறுதியாக அறிவேன். இதுவும் எனக்கு வசதியாக இருக்கிறது – ஆனால், கண்ணீ ர் வரவழைக்கும் டெட் டாக் (Ted Talk) பேச்சு ஏதேனும் வெளிவந்து, என்னுடைய மின்னஞ்சல் பெட்டி, ‘இதைப் பார்த்தபோது உன் நினைவு வந்தது,’ என்கிற குறிப்போடு அதே இணைப்பினால் நிறைந்து வழியும் வரைதான். எனவே, இவ்வளவு தாக்கம்நிறைந்த ஒளிச்சித்திரம் வெளிவரும்போது, குறைபாடுகள் குறித்து அது கோரும் கவனத்தை ஈர்ப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் சிக்கல் இதுதான்: ஒவ்வொரு முறை அந்தப் படத்தை நான் பார்த்தபோதும், அதிமனிதர்கள் (superhumans) என்கிற சொல்லைக் கேட்கும்போது கூசிப்போனேன். பாராலிம்பிக்ஸ் உலகத்திற்கு இச்சொல் புதிதானதன்று. சானல் 4ன் 2012 லண்டன் பாராலிம்பிக்ஸ்கான விளம்பரம் ‘அதிமனிதர்களைச் சந்தியுங்கள்’ என்கிற வாசகத்தோடு வந்தது.

உலகளவிலான ஊனமுற்றவர்க்கான இயக்கத்தை மேலோட்டமாக நோக்கினாலே, அவர்கள் ‘விஷேசமானவர்கள்’ என்று கருதப்படுவது நீக்கப்படவேண்டும் என்பதற்கான போராட்டம் இன்றுவரை உலகின் பல பகுதிகளில் தொடர்வதைக் காணலாம். இந்த விளையாட்டு வீரர்கள் மகத்தானவர்கள்; ஒரு பொழுதும் அவர்களது கடும் உழைப்பையும் உறுதியையும் நான் குறைத்து மதிப்பிட்டுவிடவில்லை. உண்மையான பிரச்சனை உடல் ஊனம் நமக்கெல்லாம் ‘எழுச்சிதரும் கிளர்ச்சியாக்கமாக’ வழங்கப்படுவதில்தான் உள்ளது.

ஒரு கல்லூரி விரிவுரையாளர், குறைபாடுடைய ஒரு குழந்தையின் தாய் மிகவும் குழம்பிக் கலங்கியிருந்த நிலையில் நேர்ந்த அனுபவத்தை விவரித்ததை நினைவுகூர்கிறேன். தாரே ஜமீன் பர் (மண்ணில் தெரியுது விண்மீன்கள்) என்கிற இந்திப் படம் அப்போதுதான் வெளிவந்திருந்தது. இப்படம் டிஸ்லெக்சியாவால் (எழுத்தறிவுக் குறைபாடு) பாதிக்கப்பட்ட ஒரு எட்டு வயதுக் குழந்தை, தனது திறன்களுக்கேற்பச் செயல்படமுடியாத நிலையிலிருந்து ஓர் ஓவியப் போட்டியில் வெல்லும் நிலையை ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலில் அடைவதைக் குறித்தது. அந்தத் தாய் தனது மகனின் எதிர்காலம் குறித்துக் கவலையோடு இருந்தார் – ஏனெனில் அவனுக்கு ஓவியம் தீட்டத் தெரியாது. என் விரிவுரையாளர் இந்நிகழ்ச்சையை விவரிக்கும்போது, ஓர் இடைப்பட்ட தளம் – ஒரு வகையான சாதாரணத்தன்மை – இல்லாததைக் குறித்துப் பேசினார். ஒன்று தனது ‘நிலைமை’யால் சாதிக்கமுடியாமை குறித்த இயலாமை, அல்லது, பிரமிப்பூட்டும் விஷேசத்தன்மை, அதிமனிதத்தனம்.

சரியான சொற்றொடர்

வெவ்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வெவ்வேறு சொற்றடர்களைப் பயன்படுத்துகின்றனர். நிறையப்பேர் ‘handicapped” என்கிற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தினாலும், உலகம் உடல் ஊனமுற்றவர்கள்/ குறைபாடு கொண்டவர்கள்* என்கிற சொற்றடர்களை ஏற்றுக்கொள்வதை நோக்கி நகர்ந்துவிட்டது. மருத்துவ, தர்ம ஸ்தாபன அணுகுமுறைகள் தனிநபர் மீதும் உடல் ஊனத்தின் மீதும் கவனம் குவித்துவந்த நிலையைவிட்டு நகர்ந்துவிட்டோம். இன்றைய கவனமையம் உரிமைகள் மீதும் தடைகளை அகற்றுவதிலும் தான். எனவே தான் சரியான சொற்றொடர் மிகவும் முக்கியமடைகிறது. ஒரு புறம் மதிப்பு குறித்துப் பேசிக்கொண்டு இன்னொரு புறம் தவறான அடைமொழிகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்க முடியாது.

பாராலிம்பிக்ஸ் முன்னோட்டப்படம் உலகத்தின் கவனத்தை அசாதாரணமாக ஈர்த்துள்ளது நல்ல செய்திதான் – குறைபாடுகள் குறத்துப் பேசவேண்டிய தருணம் இது. ஆனால் எனது அச்சம், தாரே ஜமீன் பர் திரைப்படம் அந்தத் தாய்க்குச் செய்ததை இப்படம் பல லட்சம் மக்களுக்குச் செய்கிறது – இடைப்பட்ட தளத்தை நீக்கிவிடுகிறது.

* [மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: மாற்றுத்திறனாளி (differently-abled) என்கிற சொல், நல்லெண்ணத்தோடு பொதுத்தளத்தில் பயன்படுத்தப்பட்டாலும், இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டது போல் ‘என்ன மாற்றுத்திறன்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு இடம்கொடுப்பதால், இத்துறையில் பணியாற்றுபவர்கள் disability/ impairment என்கிற சொற்களையே பயன்படுத்துகின்றனர். எனவே இந்த மொழிபெயர்ப்பிலும் ஊனம், குறைபாடு ஆகிய சொற்களையே பயன்படுத்தியுள்ளேன்.]

பாருள் கோஷ் ஊனமுற்றோர் உரிமைக்காக உழைப்பவர்; தற்போது இந்திய அரசாங்கத்தோடு ‘எல்லாருக்கும் எட்டும் இந்தியா’ (Accessible India Campaign) இயக்கத்திற்காக ஆலோசகராக இருக்கிறார்.


Read Original Perspective in English We’re not all Superhumans

(People with disabilities are neither underachievers nor superhuman beings.)

Story Tags: , , , , , , , ,

Leave a Reply

Loading...